தனிநபர்கள், நிறுவனங்கள் என அனைத்து இடத்திலும் தற்போது அதிகமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. மொபைல் போன் பயனர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த மோசடிகளில் ஏராளமானோர் தங்களுடைய வாழ்நாள் சேமிப்பை இழந்து வருகின்றனர். அப்படி மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் யுத்திகளில் ஒன்று தான் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள்.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி என்றால் என்ன?: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி என்பது செய்யாத குற்றத்தை செய்ததாக நம்ப வைத்து, பாதிக்கப்பட்டவர்களை அவர்களுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தி, டிஜிட்டல் அரெஸ்ட் செய்ததாக மோசடிக்காரர்கள் கூறுகின்றனர். அதன் பின்னர் இது போன்ற வழக்குகளில் இருந்து வெளியேற வேண்டுமானால் அதற்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று கூறி மிரட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களும் அதை நம்பி தாங்கள் செய்யாத குற்றத்தை செய்ததாக உணர்ந்து பணத்தை செலுத்துகின்றனர். இப்படி ஏமாந்த மக்கள் இதுவரை கோடிக்கணக்கான ரூபாயை இழந்துள்ளனர்.

ஜெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனரான நிதின் காமத், இந்தியாவில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் அதிகரிப்பது குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டில் இது போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் ரூ. 2,000 கோடிக்கு மேலான தொகையை இழந்துள்ளனர் என்று தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நிதின் காமத் தனது X பதிவில், "மக்களிடம் பயத்தை ஏற்படுத்துவதன் மூலம் மோசடிகள் செயல்படுகின்றன. மக்கள் பயப்படும் போது தவறு செய்ததாக தாங்களே நம்புகின்றனர்.
இந்த மோசடி எப்படி நடைபெறுகிறது தெரியுமா?: காவல்துறை அதிகாரி எனக் கூறிக்கொண்டு ஒருவர் முதலில் அழைப்பு விடுக்கிறார். உங்களுடைய பெயரில் கொரியர் வந்துள்ளதாகவும், அதில் போதைப் பொருள் மற்றும் பிற சட்டவிரோதமான பொருட்கள் இருப்பதாகவும், அதை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வைத்துள்ளதாகவும் உங்களிடம் தெரிவிக்கின்றனர்.
பின்னர் மோசடி செய்பவர் போலி சீருடை அணிந்து கொண்டு வாட்ஸ் அப் வீடியோ காலில் தோன்றுகிறார். அதோடு பாதிக்கப்பட்டவர்களிடம் கைது செய்து விட்டதாகவும், நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று வழக்கை முடிக்க தங்கள் கணக்கிற்கு பணத்தை அனுப்ப வேண்டும் என்றும் மிரட்டுகின்றனர். படித்த இளைஞர்கள் இதுபோன்ற மோசடிகளுக்கு ஆளாக மாட்டார்கள் என்று நாம் நினைக்கலாம். ஆனால் கோடிக்கணக்கான படித்த இந்தியர்கள் தான் இந்த மோசடிக்கு அதிகம் பலியாகியுள்ளனர்.
நான் இதை முன்பே பகிர்ந்துள்ளேன். இதுபோன்ற அழைப்புகள் வரும்போது அவசரப்படாதீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்களிடம் அல்லது ஒரு வழக்கறிஞரிடம் பேசுங்கள் அல்லது அருகில் உள்ள காவல் நிலையங்களுக்குச் சொல்லுங்கள். தங்களுக்கு வரும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க மக்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த மோசடி செயல்படுகிறது. அவசரப்பட்டு பலியாகாதீர்கள்! தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகளை பிளாக் செய்து விடுங்கள்", என்று கூறி ஒரு வீடியோவையும் பதிவிட்டு போஸ்ட் செய்துள்ளார்.
2022 முதல் 2024-ஆம் ஆண்டுக்கு இடையில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மடங்காக அதிகரித்துள்ளது என்று உள்துறை இணை அமைச்சர் சஞ்சய் குமார் கடந்த மாதம் மாநிலங்களவையில் தெரிவித்தார். டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் மற்றும் சைபர் கிரைம் குறித்த தகவல்களை வழங்கிய அவர், தேசிய சைபர் கிரைம் அறிக்கையிடல் போர்ட்டலில் 2022-ஆம் ஆண்டு 39,925 வழக்குகளும், 2024-ஆம் ஆண்டில் 1,23,672 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. 2025-ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மொத்தம் 17,718 வழக்குகள் பதிவாகி, மக்கள் ரூ. 210.21 கோடியை இழந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications