பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் அனைவருக்கும் பங்குகள் குறித்து அனைத்து விஷயங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிரபல பங்குச் சந்தை நிபுணர்கள் மற்றும் தரகு நிறுவனங்கள் வழங்கும் ஆலோசனைகளின் அடிப்படையில் பலரும் பங்குகளில் முதலீடு செய்கிறார்கள். தற்போது சில மோசடி நபர்கள் சமூக வலைத்தளங்ளில் பிரபல முதலீட்டாளர்கள் போல் பங்குகளை பரிந்துரை செய்கின்றனர். கட்டணம் செலுத்தினால் தினமும் நல்ல லாபம் தரும் பங்குகளை உங்களுக்கு பரிந்துரை செய்வோம் பொதுமக்களிடம் ஆசையை தூண்டி விட்டு மோசடி செய்கின்றனர். எனவே பொதுமக்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தற்போது பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் விஜய் கேடியா, ஒரு மாதத்தில் 20 மடங்கு வருமானத்தை ஈட்டும் பங்குகளை பரிந்துரை வழங்க உறுதியளிப்பது போன்ற ஒரு வீடியோ வெளியானது. இந்த வீடியோவை ஒருவர் எக்ஸில் விஜய் கேடியாவுக்கு ஷேர் செய்து இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்குமாறு அவரை வலியுறுத்தி இருந்தார். இதனையடுத்து பொதுமக்கள் இது போன்ற மோசடி வீடியோக்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி நகைச்சுவையாக விஜய் கேடியா வலியுறுத்தினார்.

விஜய் கேடியா எக்ஸில், நான் பங்குகளை பரிந்துரை வழங்குவது போன்ற போலி வீடியோவை யாரோ உருவாக்கியுள்ளார்கள். முகம் என்னுடையது, குரல் என்னுடையது, ஆனால் திடீரென்று, நான் ஆக்ஸ்போர்டில் படித்து நியூயார்க்கில் வளர்ந்தது போல் தெரிகிறது. நான் மேற்கத்திய உச்சரிப்புடன் சரியான ஆங்கிலம் பேசுவதை நீங்கள் எப்போதாவது கேட்டால், தெரிந்து கொள்ளுங்கள். அது நான் அல்ல என்று பதிவு செய்து இருந்தார்.
கடந்த ஆண்டு விஜய் கேடியா முன்பு டிவிட்டராக இருந்த எக்ஸில், நான் எந்த நிதி சேவைகளையும் வழங்குவதில்லை, எந்த கட்டணங்களுடனும் அல்லது கட்டணமில்லாமலும் எந்த ஆலோசனையையும் வழங்குவதில்லை என்பதை நினைவில் கொள்க. இது தொடர்பாக நான் ஏற்கனவே பல புகார்களை பதிவு செய்துள்ளேன். பல்வேறு சமூக ஊடகங்களில் ஆள்மாறாட்டம் செய்பவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பதிவு செய்து இருந்தார்.
செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் அதிநவீன ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவது கவலை அளித்து வருகிறது. தற்போது விஜய் கேடியா வீடியோ சம்பவம் அதிநவீன ஆன்லைன் மோசடிகள் குறித்த கவலைகளை வலுப்படுத்தியுள்ளது. அண்மையில் கிரிக்கெட் பிரபலம் சச்சின், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போன்ற பிரபலங்களை உள்ளடக்கிய நம்பகமான டீப் ஃபேக் வீடியோக்கள் மூலம் மோசடி நபர்கள் மக்களை ஏமாற்ற முயற்சி செய்தனர்.
கடந்த ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தனது வைரலான டீப் ஃபேக் வீடியோவுக்கு எதிராக எச்சரிக்கை செய்து இருந்தார். அந்த வீடியோவில் அவர் ஒரு மொபைல் கேமிங் செயலியை ஆதரிப்பது போல் காணப்பட்டது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications