தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைப்பற்கு 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இதையடுத்து கடந்த 10ஆம் தேதி விஜய், முதலமைச்சராக பதவி ஏற்றார்.
விஜய் தன்னுடைய தேர்தல் பரப்புரையில் பல வாக்குறுதிகளை தந்திருந்தார். குறிப்பாக மகளிர் வாக்குகளை ஈர்க்கும் வகையில் அவர் வெளியிட்ட இரண்டு அறிவிப்புகள் கவனிக்க தக்கவை. ஏழை பெண்களுக்கு அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் 'திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம்', அதே போல அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'தாய்மாமன் சீர் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம்' வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்றைய தேதி ஒரு பவுன் தங்கத்தின் விலை 1.18 லட்சம் ரூபாயாக உள்ளது. பல குடும்பங்களுக்கு 1 பவுன் நகை என்பதே எட்டாக்கனியாக இருக்கும் நிலையில் இந்த திட்டம் தங்களின் திருமணத்திற்கு உதவும் என ஏழை பெண்கள் பலரும் காத்திருக்கின்றனர். ஆனால் அதில் தான் பெரிய சவால் எழுந்துள்ளது.
ஈரான் போர் பதற்றம் காரணமாக கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க டாலர் வேண்டும் என்பதால் பொது மக்கள் தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டுக்கு தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதனை அடுத்து மத்திய அரசு தங்கம், வெள்ளி இறக்குமதி வரியை 6%இல் இருந்து 15% ஆக உயர்த்தியது. இதனால் தங்கம் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது. எனவே விற்பனை விலையும் உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம் , இறக்கம் காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஓர் ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் திருமணங்கள் நடக்கின்றன. அதில் 60% பேர் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினை சேர்ந்தவர்கள் என வைத்துக்கொண்டால் கூட விஜய் தலைமையிலான அரசு ஒரு ஆண்டுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமான திருமணங்களுக்கு ஒரு பவுன் தங்கத்தை வழங்க வேண்டியிருக்கும். அதாவது திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் வழங்கும் திட்டத்திற்கு மட்டுமே ஒரு ஆண்டுக்கு தமிழ்நாடு அரசு 2400 கிலோ அதாவது 2.4 டன்கள் தங்கத்தை வாங்க வேண்டி இருக்கும்.
அடுத்ததாக பிறந்த குழந்தைகளுக்கு அரை பவுன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் படி பார்க்கும்போது தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 7. 5 லட்சத்திலிருந்து 7.8 லட்சம் குழந்தைகள் பிறக்கிறார்கள். இவர்களில் 65 சதவீதத்திலிருந்து 70% குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் பிறக்கிறார்கள். அப்படி பார்த்தால் ஒரு ஆண்டுக்கு இந்த மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 லட்சத்து 25 ஆயிரம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட வேண்டும். ஒரு ஆண்டுக்கு இதற்கே தமிழ்நாடு அரசுக்கு 1050 கிலோ அதாவது 1.05 டன்கள் தங்கம் தேவைப்படும்.
எனவே தமிழ்நாடு அரசு இந்த திட்டத்திற்கு மட்டும் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 5500 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டி இருக்கும். தற்போது இறக்குமதி வரி 6%இல் இருந்து 15%ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலை எப்போது மாறும் என சொல்ல முடியாது. எனவே விஜய் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த கூடுதல் தொகையை செலவிட வேண்டிய கட்டாயம் இந்த ஒரு அறிவிப்பாலேயே ஏற்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவே அரசு தங்கம் மீதான வரியை உயர்த்தியது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
தங்கம் விலை என்பது தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருக்கக்கூடிய ஒரு பொருள் என்பதால் அடுத்த ஆண்டு இந்த செலவு இன்னும் கூட அதிகமாகலாம். எனவே நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது இந்த திட்டம் ஒட்டுமொத்தமாகவே மாநிலத்தின் பட்ஜெட்டில் பெரிய செலவை ஏற்படுத்தக்கூடிய ஒரு திட்டமாக இருக்கும். ஓராண்டுக்கு தங்கத்தின் விலை சராசரியாக 20 சதவீதம் உயர்கிறது என வைத்துக்கொண்டால் அரசும் தன்னுடைய பட்ஜெட்டில் இந்த ஒரு திட்டத்திற்காகவே ஒவ்வொரு ஆண்டும் 20% கூடுதலாக பணத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டி இருக்கும்.
விஜய் முதன்முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறார். அரசு, ஆளுமை, நிர்வாகம் எல்லாமே விஜய்க்கும் அவரை சார்ந்த பெரும்பாலான அமைச்சர்களுக்கும் புதிது. அதே வேளையில் ஈரான் போர் காரணமாக பெட்ரோல், டீசல் , கேஸ் விலை உயர்வு அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என பல நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன. இந்த விலை வாசி உயர்வுகளில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் மாநிலத்தின் வருவாயையும் பெருக்க வேண்டும், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என பல சவால்கள் விஜய் அரசுக்கு உள்ளது. அதில் பெரிய சவாலாக தங்கம் சீர் வரிசை திட்டம் முன்னிலையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications


