எவ்வளவு முறை தோல்வி அடைந்தாலும் முயற்சியை மட்டும் கை விடக் கூடாது என்பதற்கு இதுவரை கஜினி முகமதுவை குறிப்பிடுவார்கள். ஆனால் இனி கஜினி முகமதுவுக்கு பதிலாக ஹாப்பிலோ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான விகாஸ் டி நஹர் பெயரை நாம் சொல்லலாம்.
இன்று வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருவதற்கு முன்பு 20 தோல்விகளை கண்டவர். ஆனாலும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை இழக்காமல் வர்த்தகத்தில் சாதித்துள்ளார்.

கர்நாடகாவில் காபி மற்றும் கரும் மிளகை விவசாயம் செய்யும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் விகாஸ் டி நஹர். இவர் 2005ல் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். பின்பு ஜெயின் குழுமத்தில் சீனியர் இறக்குமதி மேலாளாராக பணியாற்ற தொடங்கினார்.
அதேசமயம் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற ஆசை விகாஸூக்கு இருந்து கொண்டே இருந்தது. இந்த சூழ்நிலையில், அவருக்கு சிம்பயோசிஸ் இன்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதனையடுத்து வேலையை ராஜினாமா செய்து விட்டு எம்.பி.ஏ. படிக்க சென்று விட்டார். படிப்பு முடிந்தவுடன், சாத்விக் ஸ்பெஷாலிட்டி புட்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார்.
இந்த நிறுவனத்தில் பணியாற்றிய போது அவருக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதனையடுத்து 2015ல் அந்த நிறுவனத்தில் இருந்து விலகினார். ஒரு வருடம் கழித்து உலர் பழங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹாப்பிலோ நிறுவனத்தை தொடங்கினார்.
2016ல் ரூ.10,000 முதலீட்டில் ஆரோக்கியமான சிற்றுண்டிகளாக உலர் பழங்களை(dry fruits) தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார். அப்போது நிறுவனத்தில் 2 பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். இன்று ரூ.500 கோடி நிறுவனமாக ஹாப்பிலோ உருவெடுத்துள்ளது. தற்போது ஹாப்பிலா நிறுவனத்தின் தயாரிப்புகள் சில்லறை விற்பனை கடைகளிலும், ஆன்லைன் வர்த்தக தளங்களிலும் எளிதாக கிடைக்கின்றன.
ஹாப்பிலோ நிறுவனம் தற்போது 40 வகையான உலர் பழங்களை உற்பத்தி செய்து வருகிறது. இதுதவிர அவரது நிறுவனம் 60 வகையான மசாலா மற்றும் 10 வகையான சாக்லேட்டுகளுடன் குறிப்பிடத்தக்க சந்தை இருப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications