சென்னை: மத்திய அரசு ஜிஎஸ்டி வரியில் சீர்த்திருத்தம் கொண்டு வர ஆயத்தமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக காம்பன்சேஷன் செஸ் (compensation cess) எனப்படும் இழப்பீட்டு வரியை நீக்கிவிட்டு அதனை அடிப்படை ஜிஎஸ்டி வரிவிகிதத்திற்குள் கொண்டு வருவதற்கு பரிந்துரை செய்திருக்கிறது. இதற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
காம்பன்சேஷன் செஸ் வரி : முதலில் காம்பன்சேஷன் செஸ் வரி என்றால் என்ன , எதற்காக இது வசூல் செய்யப்படுகிறது, எந்தெந்த பொருட்களுக்கு எல்லாம் இந்த வரி வசூல் செய்யப்படுகிறது என்பதை நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமலில் இருக்கிறது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு என்ற கருத்தாக்கத்தின் கீழ் தான் ஜிஎஸ்டி வரி கொண்டு வரப்பட்டது.

காம்பன்சேஷன் வரி என்றால் என்ன?: ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு கொண்டு வருவதால் மாநில அரசுகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பினை ஈடு செயவதற்காகவே கொண்டு வரப்பட்டது காம்பன்சேஷன் செஸ் வரி. ஜிஎஸ்டி சட்டத்தில் மாநிலங்களுக்கான இழப்பீடு என்ற பிரிவின் கீழ் 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது தான் காம்பன்சேஷன் செஸ் வரி. ஜிஎஸ்டி வரி நடைமுறையை அமல்படுத்துவதன் மூலம் மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய வரி வருவாய் இழப்பை சரி செய்வதற்காக இதனை மத்திய அரசு கொண்டு வந்தது.
மாநிலங்களுக்கு இழப்பு: 2017 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியில் இருந்து தொடங்கி அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு இந்த காம்பன்சேஷன் வரி விதிக்கும் நடைமுறை இருக்கும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த காம்பன்சேஷன் வரிதான் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட இழப்பீடுகளுக்கு எல்லாம் ஈடுகட்டும் வகையிலான வருவாயை வழங்குகிறது.
எதற்கெல்லாம் வரி: என்னென்ன பொருட்களுக்கு எல்லாம் காம்பன்சேஷன் வரி என்பது விதிக்கப்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட சில ஆடம்பர பொருட்கள் மற்றும் புகையிலை போன்ற பாவப் பொருட்களுக்கு தான் இந்த காம்பன்சேஷன் வரி என்பது வசூல் செய்யப்படுகிறது. உதாரணமாக புகையிலை பொருட்களான சிகரெட், சிகார், பான் மசாலா, குட்கா உள்ளிட்டற்றுக்கு ஜிஎஸ்டி வரி இல்லாமல் காம்பன்சேஷன் செஸ் வரி என்பது தனியாக வசூல் செய்யப்படுகிறது.
எவ்வளவு சதவீத வரி: அதேபோல இனிப்பு செறிவூட்டப்பட்ட பானங்கள், 350 சிசிக்கும் அதிகமான என்ஜின் திறன் கொண்டு மோட்டார் சைக்கிள் , ஆடம்பர கார்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த காம்பன்சேஷன் வரி என்பது வசூல் செய்யப்படுகிறது. 1% முதல் 22 % வரை இந்த காம்பன்சேஷன் வரி என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. பொதுவாக அரசு தனியாக ஒரு நிதி தொகுப்பாக இதனை ஒருங்கிணைத்து எந்தெந்த மாநிலங்களுக்கு எல்லாம் வரி வருவாயில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறதோ அந்த மாநிலங்களுக்கு பகிர்ந்து வருகிறது.
அரசு நீக்க முடிவு: காம்பன்சேஷன் வரி என்பது ஒரு தற்காலிக தீர்வாகத்தான் கொண்டுவரப்பட்டது இந்த சூழலில் தான் மத்திய அரசு தற்போது காம்பன்சேஷன் வரியை நீக்கிவிட்டு இந்த பொருட்களை எல்லாம் அதிகபட்ச வரிவிகிதமான 40% வரிக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என கூறுகிறது. இந்த வரி நீக்கப்பட்டாலும் இந்த பொருட்களுக்கு நாம் 40 சதவீதம் என்று அதிகபட்ச வரியை விதிக்க போகிறோம் என்பதால் அதற்குள் வந்துவிடும் எனவே வரி வருவாயில் பிரச்சனை இருக்காது என கூறுகிறது.
மாநிலங்கள் ஏன் எதிர்ப்பு: ஆனால் இந்த வரி நீக்கப்படுவது மாநில அரசுகளுக்கு கிடைத்து வந்த இழப்பீட்டு வரி வருவாய் கிடைக்காமல் போகும், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து அரசு மத்திய அரசு எவ்வளவு பகிர்ந்து அளிக்கிறதோ அந்த தொகை மட்டுமே கிடைக்கும். தனியாக இந்த இழப்பீடு தொகை எதுவும் கிடைக்காது.
தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்ன: தமிழ்நாட்டை பொறுத்தவரை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது ஜிஎஸ்டி வரி விகிதத்தில் பெரிய அளவிலான சீர்திருத்தம் கொண்டுவரப்படுவதால் ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை சரி செய்வதற்கு இன்னும் சிறிது காலத்திற்கு காம்பன்சேஷன் வரியை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார் . பல்வேறு பொருட்கள் குறைந்தபட்ச வரிவிதிப்பின் கீழ் வந்து விடுகின்றன அதே வேளையில் காம்பன்சேஷன் செஸ் வரியையும் நீக்குவது என்பது மாநிலங்களின் வரி வருவாயில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.செஸ் வரியை நீட்டிக்க வேண்டும் , இல்லையென்றால் மாநில அரசுகளுக்கு ஏற்படக்கூடிய இந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட மாற்று திட்டத்தையாவது கொண்டு வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications