நீங்கள் வேலை பார்த்த பழைய நிறுவனங்களில் விட்டுச் சென்ற பிஎஃப் (PF) பணத்தை எடுக்க முடியாமல் கவலையில் இருக்கிறீர்களா? அந்தப் பணத்தை எடுக்க ஆபிஸ் ஆபிஸாக அலைந்து, காகிதங்களை நிரப்பி மேலாளரிடம் கையெழுத்து வாங்கி காத்திருந்த காலமெல்லாம் இனி மலையேறிவிட்டது.
2026-ன் புதிய EPFO மாற்றத்தின் படி, நீங்கள் மறந்து விட்ட அல்லது நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருக்கும், பி.எஃப் கணக்குகளில் உள்ள சிறு தொகையை (ரூ. 1,000 வரை) எடுக்க நீங்கள் ஒரு விண்ணப்பம் கூட கொடுக்க தேவையில்லை. உங்கள் வங்கிக் கணக்கில் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் போதும், அரசே தானாகவே அந்த பணத்தை உங்கள் கணக்கிற்கு நேரடியாக அனுப்பிவிடும்.

லட்சக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு வீணாகக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள இந்த ஆட்டோமேட்டிக் செட்டில்மென்ட் முறை எப்படி செயல்படுகிறது? இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? தற்போது செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, ஒரு சூப்பரான செய்தியை மத்திய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அமைச்சகத்தின் புதிய திட்டத்தின் படி, மூடப்பட்ட அல்லது செயல்படாத கணக்குகளில் உள்ள பணம், எந்த விதமான காகித வேலைகளும் இல்லாமல் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். புதிய அறிவிப்பின் படி 1,000 ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக இருப்பு உள்ள, செயல்படாத அல்லது முடங்கிய நிலையில் உள்ள கணக்குகளை உள்ளடக்கியது. அப்படிப்பட்ட கணக்குகளில் உள்ள தொகையை திரும்ப பெற இனிமேல் எந்த விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
# ஓய்வு காலத்திற்கு ரூ.1 கோடி போதுமா? வாழ்நாள் முழுவதும் நிலையான வருமானம் பெற சிறந்த வழி எது?
ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள பி.எஃப் கணக்குகளுக்கு பிஎஃப் துறை உடனடியாக பணத்தை வங்கிக் கணக்கிற்கு மாற்றி விடும். மீதமுள்ள கணக்குகளுக்கான தொகையும் படிப்படியாக விடுவிக்கப்படும்.
விதிமுறைகளின் படி, ஒரு EPFO கணக்கில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் எந்த பரிவர்த்தனையும் நடக்கவில்லை என்றால், அது செயல்படாத கணக்கு என கருதப்படும். அப்படி செயல்படாத கணக்குகளாக உள்ள மொத்தம் 31 லட்சம் கணக்குகளில் இருந்து, முதற்கட்டமாக சுமார் 6 லட்சம் கணக்குகள் இந்தத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாம். இந்த தொடக்க முயற்சி வெற்றியடைந்தால், மீதமுள்ள சுமார் 25 லட்சம் செயல்படாத கணக்குகளுக்கும் இதே போன்ற தானியங்கி பண பரிமாற்ற முறை செயல்படுத்தப்படும்.
பி.எஃப் கணக்குகளில் தேங்கி கிடக்கும் நிதி குறித்து வெளியாகியுள்ள தரவுகள், உண்மையில் அதிர்ச்சியடைய வைக்கின்றன. புள்ளிவிவரங்களின் படி, மொத்தம் 31.86 லட்சம் செயல்படாத EPFO கணக்குகள் உள்ளன. இந்த கணக்குகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 10,903 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,000 ரூபாய் வரை மட்டுமே பணம் உள்ள கணக்குகளின் எண்ணிக்கை சுமார் 6 லட்சம். இவற்றில் மட்டும் மொத்தம் 30.52 கோடி ரூபாய் தொகையானது தேங்கியுள்ளது. இந்த கணக்குகள் கடந்த 3 முதல் 20 ஆண்டுகள் வரை எந்தவிதமான பணப்பரிமாற்றம் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.
மத்திய அரசின் இந்த அதிரடி முடிவு பல மில்லியன் EPFO உறுப்பினர்களுக்கு நேரடி பலனைத் தரும். பொதுவாக மக்கள் வேலை மாறும் போது தங்களின் பழைய பி.எஃப் கணக்குகளை மறந்துவிடுகிறார்கள். சிறிய அளவிலான பணத்தை எடுப்பதற்கு இருக்கும் சிக்கலான காகித வேலைகளால் பலர் அதை எடுக்காமல் தவிர்த்து வந்தனர். ஆனால் இனி புதிய தானியங்கி முறையின் மூலம், வாடிக்கையாளர்கள் எந்தவித சிரமமும் இன்றி தங்களின் பணத்தை பெற முடியும். பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த கணக்குகளுக்கு இப்போது ஒரு தெளிவான தீர்வு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications