மும்பை: பிரபல நிகழ்ச்சியான ஷார்க் டேங்க் இந்தியாவின் நடுவராக அறிமுகமாகி இருக்கும் ரோனி ஸ்குருவாலா தொழிலதிபர், திரைப்பட தயாரிப்பாளர் என பலமுகம் கொண்டவர்.
ஸ்டார்ட் அப்களை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி ஷார்க் டேங்க். இதில் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் பங்கேற்பாளர்களாக இருப்பர். முதலீடு செய்ய ஆர்வம் காட்டுபவர்கள் , ஏற்கனவே தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் இதில் நடுவர்களாக கலந்து கொள்வர்.

பங்கேற்பாளர்கள் தங்கள் ஸ்டார்ட் அப் ஐடியாவை விளக்கி நடுவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஐடியா பிடித்திருந்தால் நடுவர்கள் அதில் முதலீடு செய்ய முன்வருவார்கள்.
யார் இந்த ரோனி ஸ்குருவாலா: புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் நடுவர்களாக புதிதாக 6 பேர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கவனிக்கத்தக்கவர் ரோனி ஸ்குருவாலா. இவர் 2009ஆம் ஆண்டு டைம் இதழின் 100 முக்கிய நபர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்.
1980களில் டூத்பிரஷ் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கியதன் மூலம் தொழில்முனைவோராக மாறினார் ரோனி ஸ்குருவாலா. லேசர் பிரஸ்ஸஸ் என்ற அவரது நிறுவனம் நல்ல லாபத்தை தந்தது. இதனை அடுத்து கேபிள் டிவி நிறுவனத்தை 1981ஆம் ஆண்டு தொடங்கினார்.
அபார்ட்மெண்டுகளுக்கு சேவை வழங்கி வந்தார். 1990ஆம் ஆண்டு டிவி புரொடெக்சன் நிறுவனத்தை தொடங்கினார். 37 ,500 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது தான் யுடிவி என்ற புரொடெக்சன் நிறுவனம். படிப்படியாக யுடிவி படத் தயாரிப்பு நிறுவனமாக உயர்ந்தது. ஸ்வேட்ஸ், ரங் தே பஸந்தி, பஃர்பி, ஹைடர் ஆகிய புகழ்பெற்ற திரைப்படங்கள் இவரது நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. 2012ஆம் ஆண்டு யுடிவி நிறுவனம் வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் 3,769 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது.
கால் வைத்த இடமெல்லாம் வெற்றி: இதனை தொடர்ந்து ஆர்எஸ்விபி என்ற மற்றொரு பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இது மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களிலும் முதலீடு செய்து அவர் ஊக்குவித்தார். அப்கிரேட் என்ற கல்வி சார்ந்த நிறுவனத்தை 2015இல் தொடங்கினார். 2022இல் அதனை ஹரப்பா எஜுகேசன் நிறுவனத்திற்கு 300 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தார். தற்போது இவரது சொத்து மதிப்பு 12,800 கோடி ரூபாய் ஆகும்.
ரூனி ஸ்குருவாலா பல்வேறு தொண்டுகளையும் செய்து முன் உதாரணமாக திகழ்கிறார். ரூனி ஸ்குருவாலா மற்றும் மனைவி ஸரின் மேத்தார் ஆகியோர் இணைந்து தி ஸ்வேட்ஸ் அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். இது ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களுக்கு உதவும் நோக்கில் நிறுவப்பட்டு செயல்பட்டு வரும் ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம் ஆகும். இவரது நிறுவனம் தயாரித்த ஸ்வேட்ஸ் திரைப்படத்தை அடிப்படையாக கொண்டு இந்த தொண்டு நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது.
தற்போது ஷார்க் டேங்க் இந்தியாவில் நடுவராக இணைந்திருக்கும் இவர் அடுத்து எந்தெந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய போகிறார் என்பது அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் தெரிய வரும்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications