டாகா: பங்களாதேஷ் நாட்டில் நிலவிவரும் அரசியல் நிலையற்ற தன்மை இந்தியாவில் சுற்றுலாத்துறையை கடுமையாக பாதித்துள்ளது என சுற்றுலா துறையைச் சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய சுற்றுலா சந்தையில் வங்கதேசத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 23 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ சுற்றுலாவிற்காகவும் ,பண்டிகை நாட்களில் பொருட்களை வாங்குவதற்காகவும் இந்தியாவிற்கு வருகை தருவார்கள்.

தற்போது பங்களாதேஷ் நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை மற்றும் வன்முறை, போராட்டங்கள் உள்ளிட்டவை காரணமாக அங்கிருந்து சுற்றுலாவுக்காக செல்பவர்களின் எண்ணிக்கையை 90% வரை குறைந்துள்ளது என சுற்றுலாத் துறையை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவர் போராட்டங்களை தொடர்ந்து ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இந்த போராட்டங்கள் மற்றும் வன்முறை காரணமாக பங்களாதேஷ் நாட்டில் விமான போக்குவரத்து தடைப்பட்டு இருக்கிறது. மருத்துவம் சார்ந்த விசா தவிர மற்ற அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான போக்குவரத்து சேவை படிப்படியாக தொடங்கி வருகிறது இருந்தாலும் அங்கிருந்து இந்தியாவிற்கு வருகை தர பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது என எக்னாமிக் டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கதேச மக்களை பொருத்தவரை அவர்களின் டிராவல் டெஸ்டினேஷனாக இந்தியா தான் இருக்கிறது. வங்கதேசத்திலிருந்து வெளிநாடு செல்பவர்களில் சுமார் 45 சதவீதம் பேர் இந்தியாவிற்கு தான் வருகை தருகின்றனர் .
இவர்களில் 80 சதவீதம் பேர் மருத்துவ சிகிச்சைகளுக்காகவும் 15 சதவீதம் பேர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதற்காகவும் வருகை தருகின்றனர்.
வங்கதேச மக்களுக்கு பிடித்தமான நகரமாக கொல்கத்தா, சிக்கிம், காஷ்மீர் ஆகிய நகரங்கள் இருக்கின்றன. இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு 9.23 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதன் மூலம் 24,77 கோடி ரூபாய் வெளிநாட்டு பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இவர்களில் 22.5% பேர் வங்கதேச நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள். தற்போது அங்கே நிலவும் பிரச்சனை காரணமாக வங்கதேச அரசு விசா தருவதை நிறுத்தி வைத்துள்ளது. குறிப்பிட்ட சில அரிதான மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே விசா வழங்குகிறது. இதனால் மேற்குவங்க மாநிலம் மற்றும் கொல்கத்தாவில் சுற்றுலா சார்ந்த தொழில்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன.
குறிப்பாக வங்கதேசத்திலிருந்து வருபவர்கள் எண்ணிக்கை 40 சதவீதத்திற்கு மேல் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்காக செய்யப்பட்ட முன்பதிவுகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். ஐந்து நட்சத்திர தங்கும் விடுதிகள் மட்டுமில்லாமல் சிறிய கெஸ்ட் ஹவுஸ்கள் போன்றவற்றிலும் இந்த பிரச்சினை நிலவுகிறது.
2023 ஆம் ஆண்டில் வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்கு மருத்துவ சுற்றுலாவாக வந்தவர்கள் எண்ணிக்கை 48 சதவீதம் அதிகரித்திருந்தது. அதாவது 2022 ஆம் ஆண்டில் 3,0 4,067 பேர் வந்த நிலையில் 2023ஆம் ஆண்டில் 4,49,570 பேர் என அது அதிகரித்து இருந்தது.
கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒரு மாதத்திற்கு 150 வங்கதேச நோயாளிகளை கையாண்டுவந்த நிலையில் தற்போது அது வெறும் 5 என குறைந்திருப்பதாக கூறுகிறது.
நமது அண்டை நாடான பங்களாதேஷ் நாட்டில் நிலைமை சீராக டிசம்பர் மாதம் வரை ஆகும் என சொல்லப்படுகிறது. அதுவரை இந்திய சுற்றுலா துறையிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications