டெல்லி: சாம்பார், தால் என பல வகைகளிலும் இந்தியர்கள் துவரம் பருப்பினை உட்கொள்கிறார்கள். நமது மளிகை பொருட்கள் பட்டியலில் எப்பொழுதுமே துவரம் பருப்பிற்கு இடமுண்டு.
புரதச்சத்து நிறைந்தது , சுவையானது என்பன உள்ளிட்ட காரணங்களுக்காக நாம் துவரம் பருப்பினை உட்கொள்கிறோம். இப்படி தேவை இருந்து கொண்டே இருப்பதால் இந்தியாவில் நாளுக்கு நாள் துவரம் பருப்பின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

ஃபின்ஷாட்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் இந்தியாவில் துவரம் பருப்பின் விலை 31% அதிகரித்துள்ளது. முகவர்கள் பருப்புகளை வாங்கி பதுக்கி வைத்து செயற்கையான முறையில் விலையை உயர்த்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அரசும் அவ்வப்போது இது தொடர்பான எச்சரிக்கைகளை வியாபாரிகளுக்கு விடுத்து வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை நமக்கு தேவையான துவரம் பருப்பினை நாம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது கிடையாது. ஏனெனில் இந்திய விவசாயிகள் பெரும்பாலும் அரிசி மற்றும் கோதுமை விவசாயத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
இதன் காரணமாக இந்தியாவில் பருப்பு உற்பத்தி என்பது கணிசமாக குறைந்து விட்டது. 1951 - 2008 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பருப்புகளின் உற்பத்தி என்பது 45 சதவீதமாக இருந்துள்ளது. ஆனால் அதே காலக்காலத்தில் கோதுமை உற்பத்தி விகிதம் 320 சதவீதமாக இருக்கிறது.
ஒரு ஹெக்டருக்கு 800 கிலோ பருப்பு விளைவிக்கப்படுகிறது எனில், அதே நிலப்பரப்பில் 3,000 கிலோ கோதுமை கிடைக்கிறது. எனவே பருப்பை விட கோதுமை விவசாயத்தில் தான் லாபம் அதிகம். இதன் காரணமாகவே விவசாயிகள் பருப்பு உற்பத்தியை தவிர்க்கின்றனர். இதனால் 1981 ஆம் ஆண்டு முதலே இந்தியா வெளிநாடுகளில் இருந்து துவரம் பருப்பினை இறக்குமதி செய்கிறது.
கிட்டத்தட்ட நமக்கு தேவையான 10 சதவிகித துவரம் பருப்பு தான்சானியா ,மொசாம்பிக் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கிடையே பருவம் தவறிய மழை, திடீரென தாக்கும் புயல்கள் உள்ளிட்ட காலநிலை மாற்றங்களும் உணவு பொருட்கள் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு பருப்பு இறக்குமதிக்கு வரி இல்லை என அறிவிப்பு வெளியிட்டது. இது மார்ச் வரை அமலில் இருக்கும் என கூறியது. ஆனால் தற்போது ஜூன் மாதம் வரை நீட்டித்துள்ளது.
2028க்குள் பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்கு. இதற்கு விவசாயிகள் பருப்பு உற்பத்தியில் கவனம் செலுத்துவதை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிப்பது, மானியம் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் விவசாயிகளை பருப்பு உற்பத்தியை நோக்கி தள்ளும் என நம்பிக்கை கொள்ளலாம். கோதுமை, அரிசி இல்லாமல் பருப்பு வகைகளும் லாபம் தரக்கூடியவை என்ற எண்ணத்தை விவசாயிகளிடம் விதைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications