சென்னை: ஒரு வீட்டில் ஆண் , பெண் என இருவரும் வேலைக்கு சென்றாலும் கூட வீட்டில் உள்ள பெரியவர்களை கவனிப்பது, குழந்தைகளை பார்த்து கொள்வது என்பன உள்ளிட்ட பணிகளை பெண்களே கையாள வேண்டி இருக்கிறது. இந்த வேலைகளை வெளியாட்களை வைத்து செய்யும் போது அதற்கு ஒரு ஊதியத்தை வழங்குகிறோம்.
இதனை ஆங்கிலத்தில் CARE ECONOMY என அழைக்கிறார்கள். அதுவே ஒரு பெண் வீட்டில் சமையல் செய்வது, குடும்ப உறுப்பினர்களை பராமரிப்பது என்பன உள்ளிட்ட செயல்களை செய்யும் போது UNPAID CARE WORK என அழைக்கிறார்கள்.

இதன் காரணமாகத்தான் பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்குப் பிறகு குறிப்பாக குழந்தை பெற்ற பிறகு தங்களுடைய வேலைகளை விட்டுவிட்டு வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார்கள். இந்த நிலையில் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டியது அவசியம் என ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.
அண்மையில் உலக பொருளாதாரக் கூட்டமைப்பு வேலைகளில் பாலின இடைவெளியை குறைத்தால் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 35 சதவீதம் வரை உயரம் என தெரிவித்தது. குறிப்பாக இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் இது மிகவும் அவசியமாகிறது.
இந்தியாவில் பெண்கள் வேலையில் பங்களிக்கும் விகிதம் சர்வதேச சராசரியை விட குறைவாக இருக்கிறது. அதாவது Female labour force participation rate என இதனை அழைக்கிறார்கள். 15 முதல் 59 வயது குட்பட்ட பெண்கள் வீட்டை விடுத்து வெளியே வேலை செய்து சம்பாதிப்பதை இது கணக்கில் கொள்கிறது.
அந்த வகையில் பார்க்கும்போது இந்தியா இந்த விகிதத்தில் சர்வதேச சராசரியை விட குறைவான அளவில் இருக்கிறது. சர்வதேச அளவில் வேலைகளில் பெண்களின் பங்களிப்பு 47.8% ஆக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் மூன்றில் ஒரு பெண்கள் மட்டுமே இந்த வேலை செய்யக்கூடிய மக்கள் தொகைக்குள் வருகின்றனர்.
அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டும் என விரும்பும் ஒரு நாடு இப்படி வேலை இடங்களில் இருக்கும் பாலின இடைவெளியை குறைப்பது அவசியமாகிறது. இந்தியாவை பொருத்தவரை 2017 -18 ஆம் ஆண்டில் Female labour force participation rate 23 சதவீதமாக இருந்து 2022-23 ஆம் ஆண்டில் 37 சதவீதம் என அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானவை வீடுகளில் செய்யக்கூடிய ஊதியம் கிடைக்காத வேலைகள் என சொல்லப்படுகிறது.
சராசரியாக இந்திய பெண்கள் ஒரு நாளைக்கு 5.6 மணி நேரங்களை இதுபோல ஊதியம் கிடைக்காத பராமரிப்பு வேலைகளுக்காக செலவிடுகிறார்களாம் இது வழக்கமான வீட்டு வேலைகள் அல்லாத பராமரிப்பு வேலைகள். அதுவே ஆண்கள் இதற்காக ஒரு நாளைக்கு வெறும் 30 நிமிடங்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
இதன் காரணமாகவே பெண்கள் தங்களுடைய இலக்கை நோக்கி பயணிக்கவும், தொழில் ரீதியாக வெற்றி அடையவும் முடியாமல் தவிக்கிறார்கள். இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டு அரசு பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்தால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications