ஜப்பானின் பாரம்பரிய தேநீர் வகைகளில் மட்சா டீ மிகவும் பிரபலமானது. இது வழக்கமான கிரீன் டீயை விட அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவை ஆகும். இது சிறப்பாக வளர்க்கப்படும் தேயிலை இலைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் அதிக சுவையும், ஆரோக்கியமும் கொண்டது. உடலின் சக்தியை அதிகரிக்கவும், மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெறவும் இந்த டீ உதவுவதாக கூறப்படுகிறது.
அதேபோல் மட்சா டீ, உடலில் உள்ள கொழுப்பை எரித்து, உடல் எடையை கட்டுப்படுத்த உதவுவதாக சில ஆய்வு முடிவுகளும் கூறுகின்றன. இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தவும் மட்சா டீ உதவுகிறது. இந்த டீயை குடிப்பதால், ரத்த ஓட்டம் சீராக இருக்கும் என்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கலாம் என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மட்சா டீயை தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் அளவு மட்டுமே குடிக்க வேண்டும். அதிகமாக குடிக்கும்போது சில உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த சூழலில் தான், இந்திய விவசாயிகள் தற்போது மட்சா (Matcha) தேயிலை வகையை அதிகம் பயிரிட ஆரம்பித்துள்ளனர். ஏனென்றால், மட்சா ஒரு உயர்தர பசுமை தேயிலை வகையை சார்ந்தது. இதற்கான சர்வதேச சந்தை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மட்சா தூள் ரூ.20,000 வரை விலை போகிறது. இது சாதாரண தேயிலையை விட அதிக லாபம் தருவதால், இதன் மீது விவசாயிகளின் கவனம் திரும்பியுள்ளது.
மட்சா டீ, உடல்நலனுக்கு சிறப்பானது என கருதப்படுவதால், சமூக வலைதளங்களில் இது வைரலாகி வருகிறது. மேலும், உலகளாவிய சந்தையில் இதற்கான தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. இதனால், இந்திய விவசாயிகள் ஒரு வாய்ப்பாகப் பார்க்கின்றனர். இதற்கென தனித்துவ முறைகள் மற்றும் சுகாதார நன்மைகள் இருப்பதால், விவசாயிகள் இதனை புதிய முயற்சியாக எடுத்துக் கொள்கின்றனர்.
இந்த மட்சா தேயிலையை வளர்க்கும் முறைகள் தெளிவாக இருந்தால், பராமரிப்பு செலவுகளை வெகுவாக குறைக்க முடியும். அதே நேரத்தில், வெளிநாட்டு சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதிக்க முடியும். மட்சா டீ தூளை பல்க் முறையில், அதாவது அதிக அளவில் வாங்கும் போது, ஒரு கிலோவுக்கு ரூ.3,500 முதல் ரூ.20,000 வரை செலவிட வேண்டியிருக்கும். அதுவே, 50 கிராம் பாக்கெட்டுகள் ரூ.750 முதல் ரூ.1,500 விலையில் கிடைக்கிறது.
இப்போது அசாம் மற்றும் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் உள்ள விவசாயிகள், மட்சா தேயிலை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் மட்சா தயாரிக்க பயன்படுத்தப்படும் Tencha இலைகளை உற்பத்தி செய்யும் நோக்கத்தில், அதற்கேற்ற உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்து வருகின்றனர்.
இந்த முயற்சியின் மூலம், இந்தியாவில் உள்ள விவசாயிகள் உள்நாட்டு மட்சா உற்பத்தியை ஊக்குவிக்கவும், அதிக லாபம் தரும் சந்தைகளில் தனக்கென இடம் பிடிக்க முயற்சியும் செய்து வருகின்றனர். இதனால் வெளிநாட்டில் இருந்து மட்சா தூளின் இறக்குமதி தேவையை குறைத்து, இந்தியாவின் மட்சா தூளை சர்வதேச தரத்தில் கொண்டு சேர்க்க வழிவகை செய்கிறது.


Click it and Unblock the Notifications