சென்னை: தங்கத்திற்கும் இந்தியர்களுக்கும் இடையே ஒரு பிரிக்க முடியாத உறவு இருக்கிறது. வீட்டு விஷேசங்களை தொடங்கி பண்டிகை நாட்கள் வரை இந்தியர்கள் தங்கம் வாங்குவதை பழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதுதான் மத்திய அரசுக்கு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 1 டன் அளவிலான தங்கம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் உலக அளவில் அதிகமாக தங்கம் வாங்கும் இரண்டாவது நாடாக இந்தியா இருக்கிறது .அப்படி எனில் மீதமுள்ள தங்கம் அனைத்தையுமே நாம் வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்கிறோம்.

மத்திய அரசு கூறும் தகவலின் படி ஒரு ஆண்டுக்கு இந்தியா 800 முதல் 900 டன்கள் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் 2.8 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது .
கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக இந்தியா இறக்குமதி செய்த இரண்டாவது பெரிய பொருள் தங்கம் தான். இவ்வாறு தங்கத்தை இறக்குமதி செய்வதற்காக நாம் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க டாலர்களை பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இதனால் நமது இறக்குமதி அளவு ஏற்றுமதியை விட அதிகரித்து வர்த்தக பற்றாக்குறைக்கு வித்திடுகிறது.
இந்த வர்த்தக பற்றாக்குறை நாட்டின் பொருளாதாரத்தையே பலவீனமடைய செய்கிறது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவிலேயே இருக்கிறது. எனவே தான் மத்திய அரசு இந்தியர்கள் தங்கம் வாங்குவதை எப்படியாவது குறைக்க வேண்டும் என எண்ணுகிறது.
ஆனால் இந்தியா மட்டுமல்ல உலக அளவிலேயே பாதுகாப்பான முதலீடு என்றால் தங்கம் தான். பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் கூட தங்கத்தை தான் வாங்கி பெருமளவில் இருப்பு வைக்கின்றன. மத்திய அரசு மக்கள் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்பதற்காக 2015 ஆம் ஆண்டு தங்க பத்திர திட்டத்தை அறிமுகம் செய்தது.
இந்த வகையில் மக்கள் தங்கத்தை கிராமங்களாக வாங்கி ஒரு முதலீடாக வைத்துக் கொள்ளலாம். அது மட்டும் இன்றி அவர்கள் செய்யும் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.5% வட்டியும் கிடைக்கிறது. இது பெரும்பாலானவர்களுக்கு சாதகமான ஒரு முதலீடாகவும் பார்க்கப்பட்டது. எனவே ஏராளமான மக்கள் தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்தனர்.
தங்க பத்திர திட்டமும் அரசுக்கு பெரிய சுமையாக மாறி இருக்கிறது. ஏனெனில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்றத்திலேயே இருக்கிறது. எனவே அரசு தங்க பத்திரம் மூலம் திரட்டிய நிதியை விட பல மடங்கு அதிக பணத்தை திரும்ப வழங்க வேண்டி இருக்கிறது. எப்படி இருந்தாலும் தங்கத்தை நகையாகவும், நாணயங்களாகவும் வாங்கும் போக்கில் மாற்றமும் ஏற்படவில்லை.


Click it and Unblock the Notifications