தங்கத்தையும் இந்தியர்களையும் பிரிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. என்னதான் விலை உயர்ந்தாலும் தங்கத்தை எப்படியாவது வாங்க வேண்டும் என்பதுதான் இங்கு பல இல்லத்தரசிகளின் எண்ணம். எவ்வளவோ முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், கையில் பணம் சேர்ந்தால் உடனே 1 கிராம் தங்கமாவது வாங்க வேண்டும் என்று நினைக்கும் நபர்களுக்கு, ஷாக் கொடுக்கும் வகையில் மத்திய அரசு தங்கத்தின் இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது.
இறக்குமதி வரி என்பது ஒரு பொருளை வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் விதிக்கும் வரி. உதாரணமாக ஒரு நகைக்கடைக்காரர் ரூ.1 லட்சத்திற்கு வெளிநாட்டிலிருந்து தங்கம் வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். முன்பு அதற்கு 6 சதவீதம் மட்டும் அவர் வரி செலுத்தினால் போதும். அதாவது ரூ.1 லட்சம் மதிப்பிலான நகையை இந்தியாவிற்குள் கொண்டுவர 1,06,000 ரூபாய் வரை தேவைப்படலாம். ஆனால் தற்போது அரசு விதித்துள்ள 15 சதவீத வரியின் படி ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்கத்திற்கு ரூ.15,000 வரை வரி செலுத்த வேண்டும். இதனுடன் 3 சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகளும் சேரும்.
வரிக்காக செலவு செய்யும் நகை கடைக்காரர்கள் அந்த தொகையை வாடிக்கையாளர்கள் மேல் வைக்க தொடங்குவார்கள். இதனால் நகைக் கடைகளில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கும். விலை அதிகரித்தால் மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்திக் கொள்வார்கள் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், தற்போது கடல் கடந்து சென்று தங்கம் வாங்கி வருகின்றனர்.

துபாய் நகைக்கடையில் இந்தியர்களின் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. அங்குள்ள நகைக்கடை வியாபாரிகள் கொடுத்த தகவல்களின்படி, இந்தியாவிலிருந்து துபாய்க்கு சுற்றுலா பயணம் செல்லும் பயணிகள், அங்கேயே பணிக்காக வீடு எடுத்து தங்கி இருக்கும் இந்தியர்கள் தொடர்ந்து அதிகமான தங்கத்தை வாங்கி வருவதாக தெரிவித்துள்ளனர். அதிலும் சிலர் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு முன்னரே நகைகளை வாங்கி வைக்கின்றனர். இறக்குமதி வரி அதிகரித்த காரணத்தினால் துபாயில் நகை விற்பனை 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கலீஜ் டைம்ஸ் என்பது துபாயில் இயங்கி வரும் ஒரு செய்தி நிறுவனம்.
ஏன் துபாய் தங்கத்திற்கு ஸ்பெஷல் தெரியுமா?: இந்தியாவை விட துபாயில் தங்கத்தின் விலை குறைவு. இதுவும் இந்தியர்கள் துபாயில் நகை வாங்குவதற்கு ஒரு காரணமாக அமைகிறது. அதோடு அங்கு விற்பனை செய்யப்படும் தங்கத்தின் தூய்மையில் எந்த பிரச்சினையும் இருக்காது. மறைமுக கட்டணங்கள் ஏதுமின்றி நகை வாங்க முடியும் என்பது மற்றொரு சிறப்பு. உலக தரம் வாய்ந்த மற்றும் புதுமையான டிசைன்களும் கொட்டி கிடப்பதால் துபாய் நீண்ட காலமாகவே நகை பிரியர்களை ஈர்த்து வருகிறது.
அங்கு நகை கடை நடத்தி வரும் அணில் தனக் என்ற உரிமையாளர் திருமணத்திற்கு தேவைப்படும் பிரைடல் ஜுவல்லரி மற்றும் தினசரி உபயோகத்திற்கு அணியப்படும் லைட் வெயிட் ஜுவல்லரி மற்றும் 22 கேரட் ஜூவல்லரிகளை இந்தியர்கள் அதிகம் விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதேபோல இந்தியாவில் நகை வாங்குவதைவிட துபாயில் நகை வாங்குவது தான் விலை குறைவு என்று இந்தியர்கள் நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மே 21-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி துபாயில் 1 கிராம் 24 கேரட் தங்கம் Dh547.5 என்ற விலையில் விற்பனையாகிறது, 1 கிராம் 22 கேரட் தங்கம் Dh507 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்திய மதிப்புக்கு 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 14,360 ரூபாய். ஆனால் இந்தியாவில் 1 கிராம் 24 கேரட் தங்கம் 16,167-க்கு விற்பனையாகிறது.
அதேபோல 1 கிராம் 22 கேரட் தங்கம் துபாயில் இந்திய மதிப்புக்கு ரூ.13,298-க்கு விற்பனையாகிறது. ஆனால் இந்தியாவில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.14,810-க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. ஜாய் ஆலுக்காஸ் குரூப்பின் தலைவர் ஜாய் ஆலுக்காஸ், இந்தியாவின் விதிக்கப்பட்டுள்ள புதிய வரிமுறையின் காரணமாக வாடிக்கையாளர்கள் துபாய் தங்கத்தையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் துபாயில் VAT வரியை சேர்த்து கணக்கிட்டாலும் இந்தியாவை விட 11 சதவீதம் வரை விலை வித்தியாசத்தில் தங்கம் வாங்க முடிவதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications