இஸ்ரேல்-ஈரான் போர் பத்து நாட்களை கடந்துள்ள நிலையில், துபாய் தங்க சந்தையில் (Gold Souk) பெரும் மாற்றம் நடந்து வருகிறது. துபாயில் இருக்கும் பல இந்திய வம்சாவளியினர் தங்களிடம் இருக்கும் தங்க நகைகள் மற்றும் பார்களை விற்று வருகின்றனர்.
துபாயில் இருக்கும் தங்க கடைகளில் தினமும் 100-க்கும் மேற்பட்ட என்ஆர்ஐ மக்கள் தங்களிடம் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்ய நகை கடைக்கு வருவதாக கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். சிலர் தங்க நகைகளை விற்கின்றனர், சிலர் தங்க பார்களை விற்று பணமாக மாற்றுகின்றனர்.

இதை விட முக்கியமாக கடைக்காரர்கள் கூறும் விலையை (குறைந்த விலைக்கு) ஏற்றுக்கொண்டு தங்கத்தை விற்று வருகின்றனர். போர் தீவிரமடைந்ததால், துபாயில் வசிக்கும் NRIகள் தங்களிடம் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்து பணமாக மாற்றி வருகின்றனர். இதற்கு மற்றொரு காரணமும் உள்ளதாக கூறப்படுகிறது, ஐக்கிய அரபு அமிரீகத்தில் சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை அளிக்காமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதை தாண்டி உலகளவில் அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களிடம் உள்ள தங்க நகைகளை விற்று பணமாக வைத்துக் கொள்வது அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பணத்தை ஒரு கிளிக்கில் வெளிநாடுகளுக்கு மாற்ற முடியும். ஆனால் தங்க நகைகளை எல்லைகளைத் தாண்டி எளிதாக அனுப்ப முடியாது என்பதும் இந்த விற்பனைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தங்கம் விலை உயர்வில் தேக்கம் அடைந்துள்ளதும், டாலருக்கு எதிரான திர்ஹாம் மதிப்பு சாதகமாக இருக்கும் காரணத்தாலும் தற்போது இந்தியர்கள் அதிகளவில் தங்கத்தை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்திய சுங்க விதிமுறைகளின்படி, வெளிநாட்டு பயணிகள் கொண்டு வரும் தங்கத்திற்கு வரி விதிக்கப்படும். பெண் பயணிகள் அதிகபட்சமாக 40 கிராம் தங்கத்தையும், ஆண் பயணிகள் 20 கிராம் தங்கத்தையும் சுங்கவரி இல்லாமல் கொண்டு வர அனுமதி உள்ளது. இந்த வரம்பை மீறி தங்கம் கொண்டு வர விரும்பினால் சுங்க வரி செலுத்தி கொண்டு வரலாம்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு பணம் அனுப்புவதற்காக துபாயில் இருக்கும் என்ஆர்ஐ ஊழியர்கள் கையில் இருக்கும் தங்கத்தையும், சேமிப்புக்காக வாங்கி வைத்திருக்கும் தங்கத்தையும் விற்பனை செய்து பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
துபாயில் இருக்கும் தங்க கடைகளின் நிர்வாகிகள் கூறுகையில், "தற்போது சந்தையில் தங்கம் வாங்குபவர்களும் உள்ளனர், ஆனால் விற்பனை செய்பவர்கள் அதிகரித்துள்ளனர். இது அசாதாரணமான சூழ்நிலையாகும்" என்று தெரிவித்துள்ளனர். நகைக் கடைகள் தங்கத்தை 4-5 சதவீத தள்ளுபடியுடன் வாங்குகின்றன. பிரபல பிராண்டட் கடைகள் தாங்கள் விற்ற நகைகளை மட்டுமே மீண்டும் வாங்குகின்றன.
போர் தீவிரமடைவதால் முதலீட்டாளர்கள் தங்கத்தை பணமாக மாற்றி வருகின்றனர். இது துபாய் தங்க சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. NRIகள் தங்கள் சொத்துகளை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications