இந்தியாவில் ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தது முதலே பெட்ரோல் , டீசலை ஏன் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை என்ற கேள்வி தொடர்ச்சியாக முன் வைக்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி 2.0இல் கூட பெட்ரோல், டீசல் தொடர்பான எந்த ஒரு விவரமும் இடம்பெற வில்லை.
இந்தியாவே செப்டம்பர் 22ஆம் தேதி முதலே பெரிய அளவிலான ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தத்திற்கு தயாராகி வருகிறது. ஜிஎஸ்டி வரி விகிதங்கள் 5, 18 மற்றும் 40 என மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களின் விலை குறைய போகிறது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொண்டு வரப்படும் ஜிஎஸ்டி வரி மாற்றங்கள் நாட்டில் நுகர்வை அதிகரிக்க செய்யும் என அரசு நம்புகிறது. இந்த சூழலில் தான் ஏன் இந்த முறையும் பெட்ரோல் ,டீசல் போன்ற எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசிக்கவில்லை, அது பற்றி ஏன் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்ற கேள்வி மீண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது .
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனே இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இந்தியா டுடேவிற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் நிர்மலா சீதாராமனிடம் ஏன் இந்த முறையும் பெட்ரோல் ,டீசல் போன்ற எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருக்கிறது என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்துள்ள அவர், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி வரம்பின் கீழ் கொண்டு வருவது குறித்து இந்த முறை தெரிந்தே தான் ஜிஎஸ்டி கவுன்சில் விவாதமே நடத்தவில்லை என கூறியுள்ளார். சட்டரீதியாக பெட்ரோல் ,டீசல் போன்ற எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர நாங்கள் தயாராக இருக்கிறோம் ஆனால் இந்த முடிவை எடுக்க வேண்டியது மாநில அரசுகள் தான் என விளக்கம் தந்திருக்கிறார்.
தற்போது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களுக்கு மத்திய அரசின் கலால் வரி , மாநில அரசின் வாட் வரி ஆகியவை வசூல் செய்யப்படுகிறது. இந்தியாவில் சாதாரண மக்கள் தொடங்கி பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் எரிபொருள்கள் பெட்ரோல், டீசல் . மத்திய, மாநில அரசுகளுக்கு பெரிய அளவிலான வரி வருமானம் என்பது இவற்றின் மூலமே கிடைக்கிறது. எனவே தான் இதனை ஜிஎஸ்டி வரம்பின் கீழ் கொண்டு வருவது என்பது மிகவும் சென்சிடிவான மற்றும் சிக்கலான ஒரு விஷயமாக இருக்கிறது.
பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்பின் கீழ் வந்தால் மாநிலங்களுக்கு கிடைக்கக்கூடிய வாட் வரி கிடைக்காது மத்திய அரசுக்கு கலால் வரி என்பது நின்று போய்விடும் . எனவே தற்போதைக்கு அரசு இந்த எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்பின் கீழ் கொண்டுவராமல் தவிர்த்து இருக்கிறது இதன் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு கிடைக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட வரி வருவாய் என்பது அப்படியே நீடிக்கும். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் கொண்டு தான் இந்த முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமே நடந்தது, எனவே தான் பெட்ரோல், டீசல் குறித்து விவாதிக்காமல் விட்டு வைத்துள்ளனர் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications