சூப்பர் மார்க்கெட்களிலும், பழக்கடைகளிலும் பள பளவென இருக்கும் ஆப்பிள்களில் குட்டியான ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்பட்டிருக்கும். இதன் விவரங்கள் குறித்து பலருக்கும் தெரியாது. ஆனால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும், அந்த ஆப்பிள்கள் மட்டும்தான் விலை உயர்ந்தது என்று நினைத்து நம்மில் பலர் அதை வாங்கி விடுவோம். ஆனால் தரத்திற்கான சான்றாக அவை ஒட்டப்படுகிறதா? அல்லது ஆப்பிளின் ரகத்தை கருத்தில் கொண்டு ஒட்டப்படுகிறதா? என்பதை பற்றி யாருமே தெரிந்து கொள்வதில்லை. இந்த பதிவில் ஆப்பிள்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படுவதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.
நம்மில் பலர் கடையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்கப்படும் ஆப்பிளை தான் முதலில் வாங்குவோம். அதே போல கடைக்காரரும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பதை வைத்து அது தரம் வாய்ந்த ஆப்பிள் என்றும், ஏற்றுமதி செய்யப்பட்ட வகை என்றும் கூறி அதிக விலையில் நம்மிடம் விற்றுவிடுவார். ஆனால் உண்மையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது தரத்திற்கான சான்றல்ல. இது 99 சதவீதம் பேருக்கு தெரியாது.

ஆப்பிள் மட்டுமல்ல ஆரஞ்சுகளிலும் இதுபோன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விற்கப்படுகின்றன. ஸ்டிக்கர்களுடன் கூடிய பளபளப்பான ஆப்பிள்களை பார்க்கும்போது பெரும்பாலான மக்கள் அவை விலை உயர்ந்தவை என்று நினைக்கிறார்கள். பெரும்பாலும் விற்பனையாளர்கள் ஆப்பிள்களில் ஸ்டிக்கர் ஒட்டி அதிக விலைக்கு விற்கிறார்கள்.
ஆனால் இந்த ஸ்டிக்கர் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய விஷயம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே நீங்கள் ஆப்பிள் வாங்கும் போது மறக்காமல் அந்த ஸ்டிக்கரில் எழுதி இருப்பதை படியுங்கள்.
ஆப்பிளில் இருக்கும் ஸ்டிக்கரில் பழத்தின் தரம் மற்றும் அது எப்படி வளர்க்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் இருக்கும். சில ஸ்டிக்கர்களில் நான்கு இலக்க நம்பர் இருக்கும். அதாவது அவை 4026 அல்லது 4987 போன்ற நம்பர்களைக் கொண்டிருக்கும். இந்தப் பழங்கள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்களைப் பயன்படுத்தி வளர்க்கப்பட்டவை என்பதை இந்த நம்பர் குறிக்கிறது.
இந்தப் பழங்களில் பெரும்பாலும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பழங்கள் மலிவானவை, நீங்கள் அவற்றை சாப்பிட்டால், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்ட பழங்களை வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
சில பழங்களில் 5 இலக்க நம்பர் இருக்கும். அதாவது 84131, 86532 போன்ற 8-இல் தொடங்கும் நம்பர்கள். அப்படியானால் இந்தப் பழங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை என்று அர்த்தம். இந்த பழங்கள் இயற்கையானவை அல்ல. பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட பழங்களை விட அவற்றின் விலை சற்று அதிகமானதாக இருக்கலாம்.
சில பழங்களில் 9-இல் தொடங்கும் ஐந்து இலக்க நம்பர் இருக்கும். 93435 என்று சொன்னால், பழம் இயற்கை முறையில் விளைந்தது என்றும் பூச்சிக்கொல்லிகள் அல்லது ரசாயனங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும் அர்த்தம். பாதுகாப்பான பழம் என்றாலும் விலை கொஞ்சம் அதிகம். ஆனால் அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஒவ்வொரு ஸ்டிக்கருக்கும் வெவ்வேறு அர்த்தம் இருந்தாலும், சிலர் அதை பயன்படுத்தி போலி ஸ்டிக்கர்கள் தயாரித்து பழங்களில் ஒட்டுகின்றனர். உயர்தரம், பிரீமியம் ரகங்கள் என்று கூறி வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகப் பணம் வசூலிக்க இதுபோன்ற போலி ஸ்டிக்கர் கடைக்காரர்களால் பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்களை வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்கவும்.


Click it and Unblock the Notifications