பல்வேறு துறைகளிலும் இன்றைக்கு பெண்கள் அடியெடுத்து வைத்து சாதித்து வருகின்றனர் என்று நாம் பெருமைப்பட்டுக்குக் கொள்ளும் அதேவேளையில் நிறைய பெண்கள் தங்களது வேலையை பாதியிலேயே விட்டு விட்டு குடும்பப் பொறுப்புக்குத் திரும்புகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
பெண்கள் வேலையை விட்டு விலகுவதற்கு மூன்று விதமான காரணங்கள் இருப்பதாக பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாசார்யா கூறுகிறார்.

இந்தப் பிரச்னை குறித்து சில பல நாட்களாக நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். இது தொடர்பாக பல ஆய்வுகளையும் மேற்கொண்டோம். இதன் மூலமாக அவர்கள் தங்களது வேலையை பாதியிலேயே கைவிடுவதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்கிறார் அருந்ததி.
இதில் முதலாவதாக பிரசவகால கட்டம். குழந்தைகளின் சிறுவயது காலத்தில் அவர்களை சமாளிப்பதற்கு தாயின் அரவணைப்பு மிகவும் அத்தியாவசியமாக உள்ளது. என்ன தான் மகப்பேறு விடுமுறை ஓராண்டுக்குத் தரப்பட்டாலும் அது போதவில்லை. ஏனென்றால் அவர்களது குடும்பச்சூழ்நிலை அவர்களுக்கு உதவிகரமாக இருப்பதில்லை.
இரண்டாவதாக பிள்ளைகள் 10-12 ஆம் வகுப்பு வரையான காலகட்டம் தாய்க்கு மிகுந்த பொறுப்பை அளிக்கிறது. பிள்ளைகள் கோச்சிங் சென்டர்களுக்குச் சென்று வருவதற்கும் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்க வேண்டியதற்கும் பெண்களின் பங்கு நிறையவே இருக்கிறது. பிள்ளைகளை குறித்த நேரத்தில் எழுப்பி அவர்களுக்குத் தேவையான பண்டிதங்களைப் பார்ப்பதற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது.
வேலை பார்க்கும் பெண்களுக்கு இதற்குப் போதிய அவகாசம் கிடைப்பதில்லை என்பதால் தங்கள் பிள்ளைகளை சரியாகக் கவனிப்பதில்லையோ என்ற குற்ற உணர்வு எழுகிறது. இதன் காரணமாக தங்களது வேலையை அவர்கள் உதறித் தள்ளுகின்றனர்.
ஐடி பெண்கள் பற்றிய கருத்தரங்குகளில் அருந்ததி பட்டாசார்யா பேசுகையில் பெண்கள் வேலையை விடுவதற்கான மூன்றாவது காரணம், அவர்களது பெற்றோர் அல்லது மாமியார் மாமனார் உடல்நிலை பாதிப்பது காரணமாக இருக்கிறது. அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மூத்த குடிமக்களை தனியாக நர்ஸ்களை வைத்து பராமரிப்பது இந்தியாவில் அதிக செலவை ஏற்படுத்துகிறது.
தங்களைக் கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கிய பெரியவர்களை கவனிக்க முடியாமல் போகிறதே என்ற உணர்வு அவர்களை இந்த நிலைமைக்குத் தள்ளுகின்றது. இதனால் பெற்றவர்களையும், மாமனார் மாமியாரையும் கேர்டேக்கர்களிடம் விட்டுவிட்டுச் செல்ல அவர்களது மனம் ஒப்புக் கொள்வதில்லை.
இதனால் அவர்கள் வேலையை ராஜினாமா செய்கின்றனர். இதைத் தடுப்பதற்காக நான் எஸ்பிஐ-யில் இரண்டாண்டு விடுமுறை திட்டத்தை அறிமுகப்படுத்தினேன். அதன் மூலம் அவர்கள் தங்களது குழந்தைகளையும் மூத்தவர்களையும் கவனித்துக் கொள்ளும் வாய்ப்பாக இருக்கட்டும் என்று என்றார். இதன் மூலம் எஸ்பிஐ பெண் ஊழியர்கள் நிறையவே பலன் அடைந்தனர்.
இதன் மூலம் 673 பேரை வேலையில் தக்க வைத்தோம் என்றும் கூறினார். இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வேலையை விட்டு நிற்கும் பெண்களின் அளவு 30 சதவீதமாக இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications