இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே தங்கத்தின் விலையை சர்வதேச அரசியல் நிலவரங்களும் ,பொருளாதார காரணிகளும் தான் நிர்ணயம் செய்கின்றன. குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்படும் போதெல்லாம் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயரும் அது இந்திய சந்தையிலும் மிக வலுவாக எதிரொலிக்கும்.
ஈரான் - இஸ்ரேல் மோதல்: தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய அளவிலான போர் பதற்றம் உண்டாகி இருக்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளன. இது உலக அளவில் தங்கத்தின் விலைகளில் பெரிய உயர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் காரணமாக எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் கொண்ட தங்கத்தின் விலையானது வெள்ளிக்கிழமை அன்று 1 லட்சத்தை கடந்தது.

ரூ.1 லட்சத்தை கடந்தது தங்கம் விலை: வெள்ளிக்கிழமை அன்று எம்சிஎக்ஸ் வர்த்தகத்தின் 10 கிராம் கொண்ட தங்கத்தின் விலை 1,00,314 ரூபாய் என வர்த்தகமானது. தங்கத்தின் விலை இந்த அளவு உச்சம் அடைவதற்கு ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல்களே காரணம் என எஸ். எஸ் ஹெல்த் ஸ்ட்ரீட் என்ற அமைப்பின் நிறுவனரான சுகந்தா சத்யதேவ் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் ஈரான் மோதல் வலுத்தால் சர்வதேச சந்தையில் ஒரு அவன்ஸ் தங்கத்தின் விலை என்பது 3500 டாலர்கள் என்ற உச்சத்தை எட்டும் எனக் கூறியிருக்கிறார்.
ஏன் தங்கம் விலை உயர்கிறது: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும், பல்வேறு நாடுகளின் பொருளாதார பாதிக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாக முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி வருவதே தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என அவர் விளக்கம் தருகிறார். தங்கத்தின் விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாக இருப்பது அமெரிக்காவில் டாலர் குறியீடு தன்னுடைய மதிப்பை இழந்து வருவது தான்.
எவ்வளவு உயர வாய்ப்பு: கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவாக அமெரிக்க டாலர் குறியீடு என்பது சரிவடைந்து இருப்பதாக எல்கேபி செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரான ஜத்தின் திரிவேதி தெரிவிக்கிறார். அதாவது டாலரின் மதிப்பு குறைந்து வருவது சர்வதேச அளவில் தங்கத்தின் விலையை உயர்த்தி இருக்கிறது என தெரிவிக்கிறார். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலை தொடர்ந்து இந்தியாவில் தங்கத்தின் விலை கிராமிற்கு 1900 வரை உயர்ந்து இருப்பதாக தெரிவித்திருக்கும் அவர், எம்சிஎக்ஸ் வர்த்தகத்தை பொருத்தவரை தங்கத்தின் விலை 1,00,2500 ரூபாய் வரை உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்.
இந்த வாரம் தங்கம் விலை உயருமா?: எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் தங்கத்தின் விலை உயரும் போது சில்லறை விற்பனையிலும் தங்கத்தின் விலை உயரும். எனவே அடுத்து வரக்கூடிய நாட்களில் தங்கத்தின் விலை வளர்ச்சி பாதையில் தான் இருக்கும் என்பதையே இந்த நிபுணர்கள் கணித்துள்ளனர். 2025 தொடங்கியது முதல் தற்போது வரை பார்க்கும்போது தங்கம் 31% வளர்ச்சி அடைந்திருக்கிறது. உலக அளவில் அதிக லாபம் தந்த ஒரு பொருளாக தங்கம் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் தங்கத்தின் வளர்ச்சியை பார்த்தால் 16 ஆண்டுகள் அது முதலீட்டாளர்களுக்கு லாபத்தை மட்டுமே தந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications