டெல்லி: இந்தியாவில் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு பிரீமியம் தொகைகளுக்கான ஜிஎஸ்டி எப்போது குறைக்கப்படும் என மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பதில் அளித்துள்ளார.
இந்தியாவில் தற்போது காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகை மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டால் பாலிசிதாரர்கள் செலுத்தக்கூடிய பிரீமியம் தொகை கணிசமான அளவு குறையும். இதனிடையே ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுமா என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

அதில் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு பிரீமியம் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டியை குறைப்பது அல்லது விலக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ள பதிமூன்று பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் நியமனம் செய்துள்ளது என தெரிவித்துள்ளார். இந்த குழு 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீட்டு பிரீமியம் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டிக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் , 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மருத்துவ காப்பீட்டுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளதாம்.
அதுமட்டுமின்றி ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு பிரீமியம் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டிக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைகளை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றுக்கொண்டால் ஜிஎஸ்டி வரிவிகித மாற்றங்கள் அமலுக்கு வரும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
காப்பீட்டு திட்டங்களை பொறுத்தவரை இறுதியில் மொத்த தொகைக்கு தான் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. எனவே ஜிஎஸ்டி தொடர்பாக எந்த ஒரு மாற்றம் கொண்டுவரப்பட்டாலும் நேரடியாக பாலிசிதாரர்களுக்கு தான் அதன் பலன்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன் இதன் மூலம் மக்கள் செலுத்தக்கூடிய பிரீமியம் தொகை குறையும் என தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 21ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற இருக்கிறது. அப்பொழுது மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறித்து அமைச்சர்கள் குழு வழங்கிய பரிந்துரை தொடர்பாக விவாதிக்கப்படும். அந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டியை குறைப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications