தினுசு தினுசான ஐடியாக்களை வைத்து மோசடி செய்த கும்பல் தற்போது அரசாங்க திட்டங்களின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்து வருகிறது. சமீபத்தில் வெளியான செய்தியில் "பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா" (PM-கிசான்) திட்டத்தின் பெயரை பயன்படுத்தி தனி நபரின் தகவல்கள் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் கடந்த மாதத்தில் 7 புகார்கள் பதிவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடுத்த கட்டமாக பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்க திட்டத்தின் (PMEGP) பெயரைப் பயன்படுத்தி ஹைதராபாத்தைச் சேர்ந்த 33 வயது பெண்ணிடம் ரூ.1.32 லட்ச ரூபாயை அபகரித்துள்ளனர்.
சொந்தத் தொழில் தொடங்குவதற்கு பட்ஜெட் இடிக்கும் நபர்களுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரியின் PMEGP திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்குபவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்பின்மையை ஒழித்து சாமானிய மக்களை பெரிய தொழில் முனைவராக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

PMEGP திட்டத்தின் பெயரை பயன்படுத்தி தான் மோசடி கும்பல் பணம் மோசடி செயலில் ஈடுபட்டுள்ளது. போலீசாரின் கூற்றுப்படி ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அழைப்பில் பேசிய நபர் தான் ஒரு வங்கிக் கிளை மேலாளர் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு PMEGP திட்டத்தின் கீழ் லோன் வழங்கப்பட இருப்பதாகவும் கூறி பேச்சை தொடங்கியுள்ளார்.
30 சதவீத மானியத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரில் ரூ.5 லட்ச ரூபாய் லோன் வழங்க அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். கடனுக்கு மாதாந்திர EMI-யாக 5,480 செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்ட அந்தப் பெண் உடனடியாக சம்மதம் தெரிவித்து தொடர்ந்து பேச்சுக் கொடுத்துள்ளார்.
அதன் பிறகு டிடி, செல்லான் கட்டணங்கள் போன்றவற்றிற்காக ரூ.1.32 லட்சத்தை செலுத்துமாறு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கூறியுள்ளனர். உடனடியாக தனக்கு லோன் கிடைக்கப் போகிறது என்ற குஷியில் இருந்த அந்தப் பெண் அவர்கள் கூறியதற்கு இணங்க மறுபேச்சு எதுவும் பேசாமல் தனது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை அனுப்பியுள்ளார்.
மேலும் ரூ.5 லட்ச ரூபாய்க்கான "செக்" பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கே காசோலையாக அனுப்பப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர். பணத்தை கொடுத்துவிட்டு "செக்" வீட்டிற்கு வரும் என்று காத்திருந்த பெண்ணுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. பல நாட்கள் காத்திருந்தும் எந்த செக்கும் கைக்கு கிடைக்கவில்லை. அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் ஹெல்ப்லைன் நம்பரான 1930-ஐ அழைத்து நடந்த விஷயத்தை கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் அடிப்படையில் ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications