தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாகச் சட்டசபைத் தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் தேர்வு, அரசியல் தலைவர்களின் பேட்டி என மொத்த அரசியல் தளமும் அனலாகக் கொதிக்கிறது என்றால் மிகையில்லை.
இந்நிலையில் தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் கட்சியாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகம் வெள்ளிக்கிழமை மாலையில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில், இன்று தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
சாமானிய மக்கள் கடந்த சில காலமாக எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளைக் களையும் வகையில் பால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைப்பதாக ஸ்டாலின் தலைமையிலான திமுகக் கட்சி தனது தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளையில் பெண்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவத்தைத் தனது தேர்தல் வாக்குறுதியில் அறிக்கையில் திமுகக் கட்சி அளித்துள்ளது.
அரசு வேலைவாய்ப்பில் 40% இட ஒதுக்கீடு
தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் எனத் திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுகளுக்கு இணையாகப் பெண்களுக்கும் எவ்விதமான பாகுபாடுமின்றிக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளும் கிடைத்து வரும் நிலையில் அரசு வேலைவாய்ப்புகளிலும் இந்தச் சமன்பாட்டைக் கொண்டு வர விரும்புகிறது திமுக.
சத்துணவு ஊழியர்களுக்கு அரசு வேலை
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் அரசுப் பணியாளர்களாக்கப்படுவர் எனத் திமுக தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பேறுகால விடுப்பு 12 மாதம்
மேலும் அரசுப் பணியில் உள்ள பெண்களுக்குப் பேறுகால விடுப்பு 12 மாதமாக அதிகரிக்கப்படும். இதன் மூலம் ஒரு வருடம் முழுமையாக விடுமுறை அளிக்கப்படுகிறது. இது அரசுப் பணியில் இருக்கும் பெண்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் என்றால் மிகையில்லை.
நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசம்
நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தேர்தலில் வெற்றிபெற்ற பின்பு நிறைவேற்றப்பட்டால் நகரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகப்பெரிய லாபமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications