சென்னை: இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே. மோசடி செய்பவர்கள் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஏமாற்ற புதிய மற்றும் அதிநவீன முறைகளைப் பயன்படுத்துகின்றனர். மேலும் அதிகரித்து வரும் பல மோசடிகள் ஆதார் மற்றும் பிற முக்கியமான ஆவணங்களை பயன்படுத்தி நடக்கிறது என்பதுதான் இன்னும் வேதனை. இது போன்ற ஆதார் மோசடிகள் நடக்காமல் இருக்க, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
உங்கள் ஆதார் தகவலைப் பயன்படுத்தும் போது மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள நீங்கள் சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆதார் மோசடிகளில் இருந்து விடுபட நீங்கள் என்ன செய்ய வேண்டும்.. நீங்கள் என்ன செய்யக்கூடாது.. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யும்போது ஆதார் கார்டை பயன்படுத்தினால் அவற்றை எவ்வாறு பாதுகாப்பாக உபயோகிக்க வேண்டும்.. என்பது போன்ற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?: உங்கள் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்து வைக்கலாம். இதனை நீங்கள் UIDAI-யின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று லாக் செய்யலாம். இதுபோல் நீங்கள் உங்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை லாக் செய்து வைக்கும் போது எந்த ஒரு மோசடி செய்யும் நிறுவனமோ அல்லது நபரோ உங்களுடைய தகவல்களைப் பயன்படுத்த முடியாது.
உங்களுக்கு சொந்தமில்லாத பிற கம்ப்யூட்டர்களில் ஆதார் அட்டைகளை பதிவேற்றம் செய்திருந்தால் அவற்றை நீக்கி, உங்களுடைய டிஜிட்டல் விவரங்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்.
அதேபோல உங்களுடைய சமீபத்திய மொபைல் நம்பர் உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளவும். மோசடி அல்லது அடையாளத் திருட்டு ஏதேனும் நடந்திருப்பது போல் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உடனடியாக போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளிக்கவும்.
UIDAI இணையதளத்தில் உங்கள் ஆதார் பயன்பாட்டைக் கண்காணிக்கவும், உங்கள் அடையாளம் எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் கண்காணிக்கவும்.
என்ன செய்யக்கூடாது?: தற்போது மோசடிகளில் ஈடுபடுபவர்கள் டெலிவரி செய்வது போல காட்டிக் கொண்டு உங்களிடம் ஆதார் நம்பரை கேட்கிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களிலும் நீங்கள் உங்கள் ஆதார் அட்டை விவரங்களை பிறரிடம் பகிரக்கூடாது.
அரசாங்க ஊழியர், வங்கி ஊழியர் எனக் கூறிக்கொண்டு யாரேனும் உங்கள் OTP-களை கேட்க தொடர்பு கொண்டால், அவர்களுடனும் எந்த விவரங்களையும் பகிர வேண்டாம். ஆதார் அட்டைகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது, அடையாளத் திருட்டுக்கு வழி வகுக்கும்.
தற்போது ட்ரெண்டாக இராணுவ அதிகாரி போல காட்டிக் கொண்டு மோசடி செய்து வருகின்றனர். இவர்கள் காவல்துறை அதிகாரிகள் என கூறிக்கொண்டு உங்களிடம் ஆதார் கார்டு நம்பரை கேட்டாலும் அவர்களிடம் பகிர வேண்டாம். எந்த ஒரு அதிகாரியோ அல்லது நிறுவனமோ உங்களிடம் ஆதார் கார்டு நம்பரை கேட்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதுபோன்ற சிறு விஷயங்களை தெரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருந்தாலே ஆதார் தொடர்பான மோசடிகள் படிப்படியாக குறைந்து விடும்.


Click it and Unblock the Notifications