யெஸ் பேங்க். ஒரு காலத்தில் தனியார் வங்கித் துறையிலேயே மின்னிக் கொண்டு இருந்த, ஒரு நல்ல வங்கி. தற்போது, தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவே முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.
அது எல்லாம் பழைய பெருமை, இப்போதைய நிலவரத்துக்கு வருவோம்.
கடந்த மார்ச் 05, 2020 முதல் யெஸ் பேங்கில் இருந்து வாடிக்கையாளர்கள் 50,000 ரூபாய் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் எனச் சொன்னார்கள். அதனைத் தொடர்ந்து யெஸ் பேங்க் தலைப்புச் செய்தியானது. சரி யெஸ் பேங்கின் பங்கு விலைக்கு வருவோம்.
யெஸ் பேங்க் பங்கு
கடந்த மார்ச் 05, 2020 அன்று வர்த்தக நேர முடிவில் யெஸ் பேங்க் பங்கின் விலை 36.85-க்கு நிறைவடைந்து இருந்தது. இந்த செய்தி வெளியான உடன், மார்ச் 06, 2020 அன்று யெஸ் பேங்க் குறைந்த பட்சமாக 5.55 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. யெஸ் பேங்கின் பங்கு விலை 5.55 ரூபாய் வந்த போதே வாங்கி இருந்தால் சூப்பராக இருந்து இருக்கும்.
கொஞ்சம் ஏற்றம்
மார்ச் 06, 2020 அன்று காலை 33.20-க்கு வர்த்தகமாகத் தொடங்கி, 16.20-க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. ஆக மார்ச் 06, 2020 அன்றே 5.5 ரூபாய்க்கு பங்கை வாங்கி 16.20 ரூபாய்க்கு விற்று இருந்தால், ஒரே நாளில் 194 சதவிகிதம் உடனடியாக லாபம் பார்த்து இருக்கலாம்.
இன்று வரை
ஒருவேளை மார்ச் 06, 2020 அன்றைய குறைந்தபட்ச விலையான 5.5 ரூபாய்க்கு பங்கை வாங்கி, மார்ச் 11, 2020 மாலை குளோசிங் விலையான 28.80 ரூபாய்க்கு விற்று இருப்பதாக கணக்கு போட்டால்... 423 % லாபம் பார்த்து இருக்கலாம். எல்லாம் நம் நேரம் இதெல்லாம் நம் வாழ்க்கையில் நடந்து முடிந்த பிறகு தான் தெரிய வருகிறது.
காரணம் எஸ்பிஐ
யெஸ் பேங்க் பற்றிய பிரச்சனைகள் ஒரு பக்கம் வந்து கொண்டிருந்த போதே, 49 % யெஸ் பேங்க் பங்குகளை வாங்க எஸ் பி ஐ-க்கு அரசு அனுமதி கொடுத்த செய்தியும் மறு பக்கம் பற்றிக் கொண்டது. எனவே யெஸ் பேங்க் பங்கு விலை உடனடியாக நல்ல ஏற்றம் கண்டு இருக்கிறது.
கவனம் தேவை
இதற்கு மேலும் யெஸ் பேங்கின் பங்கு விலை உயருமா என்பதை எல்லாம் நீங்களே நன்கு ஆராய்ந்து, நிதி நிலை அறிக்கைகளை எல்லாம் படித்து முடிவு செய்யுங்கள். வெறுமனே எஸ்பிஐ யெஸ் பேங்கின் பெரும் பகுதியான பங்குகளை வாங்கிக் கொள்கிறது என்கிற நம்பிக்கையில் மட்டும் பங்குகளை வாங்காதீர்கள்.


Click it and Unblock the Notifications