ஒரு காலத்தில் இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியாகவும், அடுத்த ஹெச் டி எஃப் சி வங்கி மற்றும் ஐ சி ஐ சி ஐ வங்கி போல உருவாகவும் வாய்ப்பு இருக்கக் கூடிய வங்கியாக பார்க்கப்பட்டது யெஸ் பேங்க்.
இந்த 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, அந்த நல்ல எண்ணத்தை எல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில், யெஸ் பேங்க் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாக வெளி வரத் தொடங்கின.
ஒரு கட்டத்தில் மத்திய ரிசர்வ் வங்கியே தலையிட்டு, யெஸ் பேங்க் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது.
ஆர்பிஐ கட்டுப்பாடு
கடந்த மார்ச் 2020-ல் , யெஸ் பேங்கின் ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. யெஸ் பேங்கின் இயக்குநர் குழுவை, ஆர்பிஐ மாற்றியது. டெபாசிட் செய்தவர்கள், 50,000 ரூபாயை மட்டுமே வெளியே எடுக்க முடியும் என்றது. ஒரு சில வாரங்களுக்குப் பிறகு, வழக்கம் போல டெபாசிட்தாரர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என விதியைத் தளர்த்தியது ஆர்பிஐ.
இயக்குநர் குழுவில் இருவர்
வங்கியை நிர்வகிக்க சுனில் மேத்தாவை தலைவராகவும், பிரசாந்த் குமாரை முதன்மைச் செயல் அதிகாரியாகவும் நியமித்தது ஆர்பிஐ. அதோடு, மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆர் காந்தி மற்றும் முன்னாள் வங்கியாளர் அனந்த் நாராயன் ஆகியோரை, இந்த மார்ச் 2020-ல் இருந்து, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, இயக்குநர் குழுவில், கூடுதல் இயக்குநர்களாக நியமித்தது.
காலாண்டு முடிவுகள்
இந்த ஜூன் 2020 காலாண்டில் 45 கோடி ரூபாயை நிகர லாபமாகக் கணக்கு காட்டி இருக்கிறது யெஸ் பேங்க். ஜூன் 2019-ல் ஈட்டிய 114 கோடி ரூபாய் உடன் ஒப்பிட்டால் சுமார் 60 % லாபம் சரிவு தான். கடந்த மார்ச் 2020 காலாண்டில் யெஸ் பேங்க் 3,668 கோடி ரூபாயை நிகர நஷ்டமாக கணக்குக் காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
35,000 கோடி ரூபாய்
யெஸ் பேங்க் வங்கிக்கு, மத்திய ரிசர்வ் வங்கி, 50,000 கோடி ரூபாயை சிறப்பு லிக்விடிட்டியாக கொடுத்தது. அதில் 35,000 ரூபாயை, ஆர்பிஐ-க்கு, சமீபத்தில் திருப்பிக் கொடுத்தது இருக்கிறது யெஸ் பேங்க். மீதம் இருக்கும் 15,000 கோடி ரூபாயையும் குறித்த நேரத்தில், ஆர்பிஐக்கு திருப்பிச் செலுத்துவோம் எனச் சொல்லி இருக்கிறார் யெஸ் பேங்கின் தலைவர் சுனில் மேத்தா.
பங்கு விலையில் எதிரொலி
தேசிய பங்குச் சந்தையில், யெஸ் பேங்க் பங்கு விலை கடந்த 28 ஜூலை 2020 அன்று 11.1 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கியது. இன்று (21 ஆகஸ்ட் 2020) 15.5 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக இந்த 19 வர்த்தக நாளில் யெஸ் பேங்க் பங்கு விலை சுமாராக 40 % அதிகரித்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications