ஒரு காலத்தில் யெஸ் பேங்கின் பெயரைச் சொன்னாலே மிக நல்ல வங்கிகள் பட்டியலில் வைப்பார்கள்.
ஆனால் இன்று, யெஸ் பேங்கின் பெயரைச் சொன்னால் சீண்டுவார் இல்லாமல் தனியாக இருக்கிறது.
அதுவும் குறிப்பாக கடந்த மார்ச் 05, 2020-க்குப் பின், யெஸ் பேங்க் வாடிக்கையளர்கள், 50,000 ரூபாய் மட்டுமே தங்கள் பணத்தை எடுக்க முடியும் என்று சொன்ன பின் யெஸ் பேங்க் செய்திகள், தலைப்புச் செய்திகளுக்கே வந்துவிட்டது.

பெரிய வங்கி
யெஸ் பேங்கை நம்பி பல லட்சக் கணக்கான வாடிக்கையாளர்கள் சுமாராக 2.09 லட்சம் கோடி ரூபாயை டெபாசிட் செய்து இருக்கிறார்கள். சுமார் 2.25 லட்சம் கோடி கடன் கொடுத்து இருக்கிறார்கள். வாராக் கடன் 17,134 கோடி ரூபாய் இருக்கிறது. 1,337 ஏடிஎம்களும் 1,122 வங்கிக் கிளைகளும் இருக்கின்றன. சுமாராக 28.6 லட்சம் டெபிட் கம் ஏடிஎம் கார்ட்கள் பயன்பாட்டில் இருக்கிறதாம். சுருக்கமாக இந்தியாவின் ஐந்தாவது பெரிய தனியார் வங்கி இது.

ரானா கபூர்
யெஸ் பேங்க் இன்று இத்தனை பெரிய வங்கியாக வளர்ந்து இருக்கிறது என்றால் அதற்கு முழு முதல் காரனம், அந்த வங்கியின் முன்னாள் தலைவர் ரானா கபூர் தான். இப்போது ரானா கபூரை, பணச் சலவை புகாருக்காக அமலாக்கத் துறையினர் விசாரித்துக் கொண்டு இருக்கின்றனர்.

சொத்து பத்துகள்
ரானா கபூரின் குடும்பத்தினர் லண்டனில் வாங்கி வைத்திருக்கும் சொத்து பத்துக்கள் எப்படி வந்தது. 2,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் எப்படி வந்தது. 44 விலை உயர்ந்த ஓவியங்கள் எப்படி வந்தது என விசாரித்துக் கொண்டு இருக்கிறார்களாம். அதோடு போலி நிறுவனங்களாகச் சொல்லப்படும் 12 நிறுவனங்களை குறித்தும் விசாரித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.

நவம்பர் விற்பனை
யெஸ் பேங்க் பங்குகளை நான் விற்கமாட்டேன். அது எப்போதுமே வைரம் போன்றது என்று சொன்னார் ரானா கபூர். ஆனால் கடந்த நவம்பர் 2019-ல் 900 பங்குகள் போக மீதமுள்ள எல்லா பங்குகளையும் விற்றுவிட்டார் என்பதும் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டி இருக்கிறது.

ஆர்பிஐ கண்காணிப்பு
யெஸ் பேங்கில் வாராக் கடன்களை குறைத்து மதிப்பிடுகிறார்களோ என ஆர்பிஐ கண்காணிக்கத் தொடங்கியது. இந்த இடத்தில் இருந்தே யெஸ் பேங்கை ஆர்பிஐ தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கிவிட்டது. அதோடு ரானா கபூரின் பதவிக் காலத்தை ஜனவரி 31, 2019 உடன் முடித்துக் கொள்ளச் சொன்னது ஆர்பிஐ.

ஆசை
நம் யெஸ் பேன்ங்கின் தலைவர் ரானா கபூருக்கு யெஸ் பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க் போல வளர வேண்டும் என்று ஆசை. எனவே அதிகம் ரிஸ்க் எடுத்து பலருக்கும் கடன் கொடுத்தார்கள். விளைவு வாராக் கடன் அதிகரிப்பு. ஆர்பிஐ களத்தில் இறங்கி வாராக் கடனை கணக்கிட்டது.

6,000 கோடி எங்க
கடந்த 2016 - 17 நிதி ஆண்டில் ஆர்பிஐ கணக்குப் படி 8,373 கோடி ரூபாய் வாராக் கடன் வந்தது. ஆனால் யெஸ் பேங்கோ வெறும் 2,018 கோடியை மட்டுமே வாராக் கடனாக கணக்கு காட்டியது. ஆக சுமார் 6,355 கோடி ரூபாய் வாரா கடனை கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டு பிடித்தது ஆர்பிஐ.

சரிவு
இதனைத் தொடர்ந்து, யெஸ் பேங்க் நம்பி கடன் கொடுத்த பல இந்திய நிறுவனங்கள் திவாலாகத் தொடங்கின. உதாரணமாக IL&FS, திவான் ஹவுசிங் என தொடர்ந்து திவாலாகத் தொடங்கின. இதில் திவான் ஹவுசிங்-க்கு யெஸ் பேங்க் சுமாராக 4,500 கோடி ரூபாயும், IL&F நிறுவனத்துக்கு சுமாராக 2,500 கோடி ரூபாயும் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

சொதப்பல்
மோசமான வங்கி நிர்வாகம் மற்றும் வாராக் கடன்களை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைத்து வைத்தது போன்ற இரண்டு பெரிய தவறுகளால் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்து கொண்டு இருந்த யெஸ் பேங்க், இன்று தலை நிமிர முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது.