இந்தியாவை சேர்ந்த மென்பொருள் பொறியாளரான சோஹம் பரேக் ஒரே சமயத்தில் 5க்கும் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் வேலை செய்தார் என அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் குற்றச்சாட்டு முன்வைத்தனர். இதனை அடுத்து டெக் துறையில் பரவலாக பேசப்படும் ஒரு நபராக சோஹம் பரேக் மாறினார். இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சோஹம் பரேக் தற்போது பதில் அளித்துள்ளார்.
மிக்ஸ் பேனல் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சுஹைல் தோஷி என்பவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இந்தியாவின் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சோஹம் பரேக் என ஒருவர் இருக்கிறார், அவரை தயவு செய்து உங்கள் நிறுவனத்தில் வேலைக்கு எடுக்காதீர்கள் என பதிவு செய்திருந்தார். இந்த நபர் ஒரே சமயத்தில் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்கிறார் நம்மை எல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் இவர் உங்கள் நிறுவனத்தில் விண்ணப்பம் செய்தால் வேலைக்கு எடுக்காதீர்கள் என தெரிவித்திருந்தார்.

இவரின் இந்த பதிவை தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைவர்களும் நாங்களும் இவரை வேலைக்கு எடுத்திருக்கிறோம் பல நிறுவனங்களில் வேலை செய்வது தெரிந்து பின்னர் அவரை வேலையை விட்டு நீக்கி இருக்கிறோம் என பதிலளித்தனர். 10க்கும் அதிகமான நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் சோஹம் பரேக் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இந்நிலையில் சோஹம் பரேக் பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகள் தன் மீது வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து தற்போது விளக்கம் தந்திருக்கிறார் . என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைதான் எனக் கூறியிருக்கும் அவர் , நான் செய்ததை குறித்து பெருமைப்படவில்லை , ஆனால் என்னுடைய பொருளாதார சூழல்கள் அப்படி இருக்கின்றன என தெரிவித்துள்ளார். யார் ஒரு வாரத்திற்கு 140 மணி நேரம் வேலை செய்வார் என கேள்வி எழுப்பியிருக்கும் அவர் ஆனால் நான் செய்தேன் ஏன் என்றால் என்னுடைய நிதிநிலைமை மிகவும் மோசமாக இருந்தது என கூறி இருக்கிறார்.
மேலும் அனைத்து நிறுவனங்களிலுமே எனக்கு வழங்கப்பட்ட வேலைகளை மற்ற நபர்களின் உதவி ஏதும் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எதையும் பயன்படுத்தாமல் நானே தனிப்பட்ட முறையில் முடித்துக் கொடுத்திருக்கிறேன் என அவர் விளக்கம் அளித்துள்ளார். 2022 ஆம் ஆண்டிலிருந்து தான் ரிமோட் முறையில் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஒரு சமயத்தில் நான்கு நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறேன் ,ஒரு மாதத்திற்கு 40,000 அமெரிக்க டாலர்கள் வரை சம்பளமாக பெற்றிருக்கிறேன் என கூறியுள்ளார். தற்போது ஒரே சமயத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு வேலை செய்வதை நிறுத்திவிட்டேன் எனக் கூறியிருக்கும் அவர், இனி ஒரு நிறுவனத்தில் மட்டுமே வேலை செய்வது என முடிவெடுத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தற்போது தான் டார்வின் என்ற ஒரு நிறுவனத்திற்காக மட்டுமே வேலை செய்து வருவதாக விளக்கம் தந்திருக்கிறார். டார்வின் நிறுவன தலைமை செயல் அதிகாரியும் சோஹம் பரேக் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்வதை உறுதிப்படுத்தி இருக்கிறார், அவர் மிக திறமையான ஒரு பொறியாளர் என்றும் அவருக்கு நாங்கள் வேலைவாய்ப்பை மறுக்க போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications