நாட்டின் இரண்டாவது ஐ.டி. சேவை நிறுவனமான இன்போசிஸின் நிறுவனர்களில் ஒருவர் என்.ஆர். நாராயண மூர்த்தி. 75 வயதை கடந்து விட்டபோதிலும் இன்றும் இவர் பம்பரமாக உழைத்து கொண்டிருக்கிறார். இவரது மகளின் கணவர்தான் இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனாக். நாராயண மூர்த்தி மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக சொல்வார். தற்போது பேட்டி ஒன்றில், வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் இந்தியா போட்டியிட வேண்டுமானால் இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று நாராயண மூர்த்தி தெரிவித்தார்.

3one4 Capital-ன் பாட்காஸ்ட் 'The Record'-ன் முதல் எபிசோட் இன்று யூடியூப்பில் வெளியானது. அந்த எபிசோடில் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி இன்போஸின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பையுடன் கலந்துரையாடி இருந்தார். அப்போது, தேசத்தை கட்டியெழுப்புதல், தொழில்நுட்பம், இன்போசிஸ் நிறுவனம் மற்றும் இன்றைய இளைஞர்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்தார். குறிப்பாக, சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட, நமது இளைஞர்கள் கூடுதல் மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
நாராயண மூர்த்தி பேசுகையில், இந்தியாவின் வேலை உற்பத்தித்திறன் உலகிலேயே மிகக் குறைவான ஒன்றாகும். நாம் நமது வேலை உற்பத்தி திறனை மேம்படுத்தாத வரையில், அரசாங்கத்தில் ஊழலை குறைக்காத வரையில், முடிவு எடுப்பதில் நமது அதிகாரத்துவத்தின் தாமதத்தை குறைக்காத வரை, நம்மால் அபரிமிதமான முன்னேற்றம் அடைந்த நாடுகளுடன் போட்டியிட முடியாது.
எனவே வேண்டுகோள் என்னவென்றால், இது எனது நாடு, வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய விரும்புகிறேன் என்று நமது இளைஞர்கள் கூற வேண்டும். உங்களுக்கு தெரியும், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜெர்மனியர்களும், ஜப்பானியர்களும் இதைத்தான் செய்தார்கள். ஒவ்வொரு ஜெர்மனியரும் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு கூடுதலாக சில மணி நேரம் வேலை செய்வதை உறுதி செய்தனர் என்று தெரிவித்தார்.
வாரத்திற்கு 5 நாட்கள் பணியாற்றும் நிறுவனங்களில் வேலை பார்ப்போர் வாரத்திற்கு 40 மணி நேரமும், 6 நாட்கள் பணியாற்றும் நிறுவனங்களில் வேலை பார்ப்போர் 48 மணி நேரமும் பணியாற்றும் நிலையில் 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று நாராயண மூர்த்தி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications