பங்கு தரகு உள்ளிட்ட பல்வேறு நிதி சேவைகளை வழங்கும் நிறுவனம் ஜீரோதா. இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் சகோதர்களான நிகில் காமத் மற்றும் நிதின் காமத். கடந்த நிதியாண்டில் ஊதிய அடிப்படையில் நம் நாட்டில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனர்களில் அதிக சம்பளம் பெற்ற நிறுவனர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.
இரண்டாவது இடத்தில் அண்மையில் அப்பாவான ஓயோ நிறுவனத்தின் ரித்தேஷ் அகர்வால். இவருக்கு கடந்த நிதியாண்டில் ஓயோ நிறுவனம் ஊதியமாக ரூ.12 கோடி கொடுத்தது.

கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திடம் தாக்கல் செய்த அறிக்கையின்படி, 2022-23ம் நிதியாண்டில் ஜீரோதா நிறுவனத்தின் நிறுவனர்களான நிதின் காமத் மற்றும் நிகில் காமத் ஆகியோருக்கு தலா ரூ.72 கோடி ஊதியமாக வழங்கப்பட்டது.
என்ட்ராக்கர் கூற்றுப்படி, நிகில் மற்றும் நிதின் காமத் உள்பட ஜீரோதாவின் இயக்குனர்கள் கிட்டத்தட்ட ரூ.200 கோடி சம்பளமாக பெற்றுள்ளனர். ஜீரோதாவின் முழு இயக்குனரும், நிதின் காமத்தின் மனைவியுமான சீமா பாட்டில் ஊதியமாக ரூ.36 கோடி பெற்றுள்ளார்.
2021-22ம் நிதியாண்டில் ஜீரோதாவின் இயக்குனர்கள் குழு, காமத் சகோதரர்கள் மற்றும் பாட்டீலுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பளத்தை வழங்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அப்போது, நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த நிதின் காமத், ரூ.100 கோடி என்பது உண்மையான சம்பளம் அல்ல ஆனால் மாறாக பணப்புழக்கம் மற்றும் இடர் தேவைகளுக்கு புரோமோட்டர்ஸ் பெறக் கூடிய அதிக தொகை என்று விளக்கம் அளித்தார்.
கடந்த 2022-23ம் நிதியாண்டில் ஜீரோதா நிறுவனத்தின் பணியாளர்களுக்கான செலவினம் 35 சதவீதம் அதிகரித்து ரூ.623 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் இயக்குனர்களுக்கான ஊதியம் உள்பட மொத்தம் ரூ.380 கோடியை நிறுவனம் வழங்கியது. எஞ்சிய ரூ.236 கோடி ESOPன் கீழ் வழங்கப்பட்டது.
பணியாளர் பங்கு உரிமை திட்டம் (ESOP) என்பது ஊழியர்களுக்கு நிறுவனத்தில் உரிமை பங்கை வழங்கும் ஒரு வகையான பணியாளர் நலன் திட்டமாகும். முந்தைய 2021-22ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் பணியாளர்கள் செலவினம் ரூ.459 கோடியாக இருந்தது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஜீரோதா நிறுவனம் மிகவும் லாபகரமான நிறுவனமாக விளங்குகிறது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் ஜீரோதா நிறுவனம் வருவாயாக ரூ.6,875 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 38.5 சதவீதம் அதிகமாகும்.
முந்தைய 2021-22ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.4,964 கோடியாக இருந்தது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் ஜீரோதா நிறுவனத்தின் நிகர லாபம் 39 சதவீதம் அதிகரித்து ரூ.2,907 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.2,094 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.


Click it and Unblock the Notifications