2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் தற்போது வரை உலக அளவிலும் சரி உள்ளூர் அளவிலும் சரி தங்கத்தின் விலை 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருக்கிறது. தங்கம் விலை உயர்வு குறித்து தான் யாரைப் பார்த்தாலும் பேசி வருகின்றனர். பல்வேறு நிபுணர்களும் தங்கத்தை வாங்குங்கள், தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் என தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு தங்கத்தை ஒரு முதலீடாக பார்க்க கூடாது என எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அவர் இவ்வாறு கூறுவதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் விரிவாக தெரிந்து கொள்வோம். தங்கத்தின் விலை உயர்வு சாமானிய மக்களுக்கு கண்ணீரை வரவழைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஒரு பவுன் வாங்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டிய நிலைக்கு மக்கள் ஆளாகி இருக்கின்றனர்.

ஒரு கிராமுக்கு ஒரு சின்ன மூக்குத்தி வாங்க வேண்டுமென்றால் கூட குறைந்தது 15 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டும் என்ற சூழல் தற்போது வந்துவிட்டது. இத்தகைய சூழலில் தான் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு எச்சரிக்கை பதிவை வெளியிட்டு இருக்கிறார் .அதில் தங்கத்தை ஒரு முதலீடாக நான் பார்க்கவில்லை அமைப்பு ரீதியான நிதி அபாயங்களுக்கு எதிரான ஒரு காப்பீடு தான் தங்கம் என கூறியிருக்கிறார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவரும் , பொருளாதார நிபுணருமான கீதா கோபிநாத்தின் கட்டுரையை பகிர்ந்திருக்கும் ஸ்ரீதர் வேம்பு, கீதா கோபிநாத் கூறும் கருத்துக்களை நான் முழுவதுமாக ஏற்கிறேன் என தெரிவித்திருக்கிறார். அமெரிக்க பங்குச்சந்தை ஒரு தெளிவான மற்றும் ஒரு மிகப்பெரிய குமிழி நிலையில் இருக்கிறது என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
2008 -2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடி போன்ற ஒரு நிகழ்வை நம்மால் நிராகரிக்க முடியாது என சூசகமாக தெரிவித்திருக்கிறார். மேலும் தங்கமும் ஒரு பெரிய அளவிலான எச்சரிக்கை சிக்னலை வெளிப்படுத்துகிறது என சுட்டிக்காட்டிருக்கும் ஸ்ரீதர் வேம்பு, தங்கத்தை ஒரு முதலீடாக நான் நினைக்கவில்லை முறையான நிதி அபாயத்திற்கு எதிரான ஒரு காப்பீடாக தான் நினைக்கிறேன் என கூறியிருக்கிறார்.
இறுதியில் நிதி என்பது ஒரு பொருளின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை தொடர்பானது, கடன் அளவுகள் உச்சத்தை எட்டும் போது அந்த நம்பிக்கை உடைந்து விடும் என பதிவு செய்திருக்கிறார் .இந்த அமைப்பில் இருக்கும் அனைத்து கடன்களையும் திரும்ப செலுத்துவதற்கு ஏஐ கடினமாக உழைக்கும் என நான் நம்புகிறேன் என அவர் பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீதர் வேம்புவின் இந்த பதிவு நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications