கர்நாடக மாநிலத்தின் தார்வாடை சேர்ந்த பெண் ஷீத்தல். 2023 ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று சோமேட்டோவில் ஒரு பிளேட் மோமோஸ் ஆர்டர் செய்துள்ளார். அந்த மோமோஸின் விலை ரூ.133, கூகுள் பேயில் அதற்கான ரூ.133.25ஐ ஷீத்தல் செலுத்தியுள்ளார். சில நிமிடங்களில் ஷீத்தலின் போனுக்கு மோமோஸ் டெலிவரி செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
இதில் ஷீத்தல் குழப்பமடைந்து விட்டார். அவர் ஆர்டர் செய்த மோமோஸும் வரவில்லை. அவரது வீட்டுக்கு டெலிவரி பார்ட்னர்களும் வரவில்லை. ஆனால் ஆர்டரை சோமேட்டோ டெலிவரி ஏஜெண்ட் வாங்கிச் சென்றுவிட்டதாக உணவகம் தெரிவித்துள்ளது. அந்த ஏஜெண்டை தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை.

இதைத் தொடர்ந்து சோமேட்டோ கஸ்டமர் சர்வீஸ் எண்ணை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். இதற்கு 72 மணிநேரங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் அதற்குள் தீர்வு காண்பதாக சோமேட்டோ கஸ்டமர் சர்வீஸில் இருந்து இமெயில் வந்துள்ளது.
ஆனால் சொன்னபடி எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இதையடுத்து விரக்தியடைந்த ஷீத்தல் சோமேட்டோவுக்கு 2023 செப்டம்பர் 13 ஆம் தேதியன்று ஒரு லீகல் நோட்டீஸை அனுப்பினார். பலன் இல்லாததால் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஷீத்தல் வழக்கு தொடர்ந்தார்.
ஷீத்தலுக்கு உறுதியளித்தபடி 72 மணிநேரத்துக்குள் தீர்வு தரவில்லை என்று நீதிமன்றம் உணர்ந்தது. சோமேட்டோ நிறுவன வழக்குரைஞர் தந்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து ஷீத்தல் செலுத்திய ரூ.133.25ஐ சோமேட்டோ மே 2 ஆம் தேதியன்று திருப்பியளித்தது.
ஆனால் சோமேட்டோ தரப்பில் சேவைக் குறைபாடு இருப்பதோடு வாடிக்கையாளருக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தியதாக நீதிமன்றம் கூறியது. அத்துடன் வாடிக்கையாளர்கள் செய்யும் ஆர்டருக்கேற்ற பொருட்களை டெலிவரும் செய்யும் தொழிலை சோமேட்டோ செய்து வருகிறது. ஆனால் புகார்தாரர் கூறியபடி அவருக்கு செய்யவேண்டிய டெலிவரியை சோமேட்டோ செய்யவில்லை. இதற்கு சோமேட்டோ நிறுவனமே முழுப் பொறுப்பாகும் என்று நீதிமன்றம் கூறியது.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் ஈஷப்பா கே புட்டே, ஷீத்தலுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கும் மன உளைச்சலுக்கும் இழப்பீடாக ரூ.50,000மும் வழக்குச் செலவாக ரூ.10,000மும் சோமேட்டோ நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதன் மூலம் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு மன உளைச்சலையும் சேவைக் குறைபாட்டையும் ஏற்படுத்தியிருந்தால் அதற்கு தக்க இழப்பீடு தரவேண்டும் என்ற பாடத்தை கர்நாடக மாநில நுகர்வோர் நீதிமன்றம் நிரூபித்துள்ளது.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications