ஆர்பிஐ மானிட்டரி பாலிசி என்று அழைக்கப்படும் ஆர்பிஐ-ன் இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடும் கூட்டத் தொடர் இதுவரை கூடி எந்த அறிக்கையும் வெளிவராத நிலையிலேயே இப்போதே வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களை அதிகரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
அரசு வங்கிகள்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தன் எம்.சி.எல்.ஆர் (marginal cost of funds based lending rate)-ஐ 0.05 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இது கடந்த அக்டோபர் 01, 2018ல் இருந்து நடைமுறைக்கும் வந்து விட்டது. நீரவ் மோடி புகழ் பஞ்சாப் நேஷனல் பேங்க் தன்னுடைய எம்.சி.எல்.ஆர்-ஐ 0.2 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
தனியார் வங்கிகள்
ஹெச்.டி.எஃப்சி தன்னுடைய Retail Prime Lending Rate (RPLR) என்று அழைக்கப்படும் ஆர்.பி.எல்.ஆர்-ஐ 0.1 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கடனாளிகளுக்கு தற்போது 8.80-ல் இருந்து 9.05 சதவிகிதத்துக்கு கடன் வழங்கி வருகிறது. ஐசிஐசிஐ வங்கி தன்னுடைய எம்.சி.எல்.ஆர்-ஐ 0.1 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
வழக்கத்துக்கு மாறானது
எப்போதும் ஆர்பிஐ-ன் வட்டி விகித கூட்டங்கள் முடிந்த பின், ஆர்பிஐ-ன் வட்டி விகிதங்களை அனுசரித்து தான் மற்ற வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களை மாற்றும். ஆனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக மற்ற வங்கிகள் ஆர்பிஐ கூட்டத்துக்கு முன்பே தங்கள் வட்டி விகிதங்களை அதிகரித்துக் கொண்டார்கள்.
இப்போது
தற்போது ஆர்பிஐ-ன் ரெப்போ ரேட் (ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதம்) 6.5 சதவிகிதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் (மற்ற வங்கிகள், ரிசர்வ் வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதம்) 6.25 ஆகவும் இருக்கிறது. நாளை மறுநாள் அக்டோபர் 05-ம் தேதி நடக்க இருக்கும் கூட்டத்தில் ரிவர்ஸ் ரெப்போ ரேட் 0.25 சதவிகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.
ஏன் உயர்வு
பங்குச் சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் மத்திய ரிசர்வ் வங்கி தன் ரிவர்ஸ் ரெப்போ ரேட்டை அதிகரிக்க அநேக வாய்ப்பு இருப்பதாகவே சந்தை வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
இதனால் எனக்கு என்ன
வங்கியின் வட்டி விகிதங்கள் அதிகரித்திருப்பதால், இனி கடன் வாங்குபவர்கள் அதிக வட்டிக்குத் தான் கடன் வாங்க வேண்டி இருக்கும். வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கும் கொஞ்சம் வட்டி எக்ஸ்ட்ரா கிடைக்கலாம். இதனால் வங்கிகளுக்கான பண வரத்து அதிகரிக்கும், வங்கியில் இருந்து வெளியேறும் பணம் குறையும். ஒட்டு மொத்தத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் பணப் புழக்கம் குறையும்.


Click it and Unblock the Notifications