ஒரு காலத்தில் நாம் சம்பாதிக்க தொடங்கியவுடன், நம் வீட்டு பெரியவர்கள் நம்மிடம், பணம் கைக்கு வந்த உடனே தாம் தூம்ன்னு செலவு பண்ணாதே, தேவையானதை மட்டும் வாங்கு, கொஞ்சம் சேமித்து வை என்று சொல்லியிருப்பார்கள். குறிப்பாக 50/30/20 பட்ஜெட் விதியை நம்மிடம் சொல்லி இருப்பார்கள். அதாவது மொத்த வருவாயில் 50 சதவீதத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு ஒதுக்க வேண்டும், 30 சதவீதத்தை விருப்பமான தேவைகளை நிறைவேற்ற பயன்படுத்த வேண்டும் மற்றும் 20 சதவீதத்தை சேமிப்புக்காக ஒதுக்க வேண்டும்.
அப்போது சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இது 30 ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் இன்றைய பொருளாதாரத்தில், அதிகரித்து வரும் பணவீக்கம், டிஜிட்டல் நிதி ஆகியவற்றுடன் அந்த பட்ஜெட் விதி சரியா இருக்குமா என்றால் கேள்விக்குறி தான்.

அதிலும் ஜெனரேஷன் இசட் தலைமுறையினர் மற்றும் மில்லினியல்ஸ் பாரம்பரிய 50/30/20 பட்ஜெட் முறையை காலாவதியான ஒன்றாக பார்க்கின்றனர். ஆனால் தற்போது இந்த தலைமுறையினர் பணத்தை சேமிப்பது மட்டுமல்ல, வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டே செல்வத்தை வளர்க்க வேண்டும் என்கிறார்கள். தற்போதைய நவீன நிதி யதார்த்தங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய அணுகுமுறை இங்கே பார்ப்போம்.
ஒழுங்கற்ற வருமானம்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிலையான ஒரு வேலை பார்த்த முந்தைய தலைமுறையினரை போன்றவர்கள் அல்ல இன்றைய தலைமுறையினர். பல இளம் தொழில்நிபுணர்கள் இன்று ஃப்ரீலான்சிங், டிராயிங் உள்ளிட்ட கிக் வேலை அல்லது பல வருமான வழிகள் மூலம் சம்பாதிக்கிறார்கள். எனவே இப்படித்தான் வருமானத்தை செலவிட வேண்டும் என்ற ஒரு கடுமையான பட்ஜெட் செயல்முறை ஒழுங்கற்ற வருமானத்துக்கு ஒத்து வராது. 50/30/20 பட்ஜெட்டுக்கு மாற்றாக, சதவீத அடிப்படையிலான தகவமைப்பு பட்ஜெட் மாடல் சிறப்பாக செயல்படுகிறது. அதாவது அத்தியாவசிய தேவைகளுக்கு ஒரு நிலையான சதவீதத்தை ஒதுக்குங்கள். அதேசமயம் சேமிப்பு மற்றும் விருப்ப செலவினங்களை வருவாயின் அடிப்படையில் செய்ய வேண்டும்.
வாழ்க்கை செலவு அதிகரிப்பு
வீட்டுவசதி,கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் அதிகரித்துள்ளன. எனவே நமது அத்தியாவசிய செலவுகளை 50 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த முடியாது. எனவே 60/20/20 பட்ஜெட் அணுகுமுறை சாத்தியமானது இருக்கும். வருமானத்தில் 60 சதவீதத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும், 20 சதவீதம் முதலீடுகள் மற்றும் கடனுக்கு செல்லும் எஞ்சிய 20 சதவீதம் நெகிழ்வான செலவினங்களுக்கு செல்லும். இன்றைய காலத்தில் வாடகை,மாணவர் கல்வி கடன்கள் மற்றும் காப்பீடு ஆகியவற்றுக்காக வருமானத்தில் பெரும் பங்கு செல்கிறது என்பதை இந்த மாற்றம் வெளிப்படுத்துகிறது.
முதலீடுக்கு முன்னுரிமை
குறைந்த வட்டி வருவாய் கிடைக்கும் சேமிப்பு கணக்கில் பணத்தை போட்டு வைப்பது செல்வத்தை உருவாக்க போதுமானதாக இருக்காது. அதற்கு பதிலாக உங்களது வருவாயில் குறைந்தபட்சம் 15 சதவீதத்தை பங்குகள், மியூச்சுவல் பண்ட் அல்லது டிஜிட்டல் சொத்துக்களில் போடலாம். இது உங்கள் பணம் பணவீக்கத்தால் மதிப்பை இழப்பதை விட வளர்வதை உறுதி செய்யலாம்.
குற்றமற்ற செலவுகள்
பழைய பட்ஜெட் முறை தங்களை கட்டுப்படுத்துவதாக இன்றைய தலைமுறையினர் உணர்கின்றனர். இதனால் அந்த பட்ஜெட்டை செயல்பாட்டை முற்றிலுமாக ஒதுக்கின்றனர். தங்களது வருமானத்தில் சிறு சதவீதத்தை தங்களது தனிப்பட்ட மகிழ்ச்சி, பயணம் போன்றவற்றுக்காக ஒதுக்கின்றனர். இது அவர்களுக்குள் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துகிறது மேலும் அவர்கள் எந்த இழப்பையும் இழக்கவில்லை என்பதை உணர்கின்றனர்.
காலத்திற்கேற்ப பட்ஜெட்
50/30/20 பட்ஜெட் செயல்முறை அந்த காலத்துக்கு சரியாக இருந்திருக்கலாம் ஆனால் தற்போதைய நிதி பரப்பு நெகிழ்வுத்தன்மை கோருகிறது. தகவமைப்பு, முதலீட்டை மையமாக கொண்ட மற்றும் அனுபவத்தை அடிப்படையாக கொண்ட பட்ஜெட் உத்தி நீண்ட கால நிதி வெற்றிக்கு முக்கியமாகும் என்று ஜெனரேஷன் இசட் தலைமுறையினர் மற்றும் மில்லினியல்ஸ் நினைக்கின்றனர். இலக்கு சேமிப்பது மட்டுமல்ல நமது வாழ்க்கை பயணத்தில் வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டே செல்வத்தை வளர்ப்பது ஆகும்.
Story Written:Subramanian


Click it and Unblock the Notifications