இந்தியர்களுக்கு சேமிப்பு என்றாலே தங்கம் தான் முதலில் நினைவுக்கு வரும். கையில் பணம் வந்தாலே தங்கத்தை வாங்கி வைத்து வைக்க கூடியவர்கள் தான் இந்தியர்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த போக்கு மாறி வருகிறது. தங்கத்திற்கு மாற்றாக பங்குச்சந்தைகள் முதலீடு ,மியூச்சுவல் ஃபண்டு முதலீடு உள்ளிட்டவற்றை நோக்கி தற்போதுள்ள மக்கள் நகர்ந்து வருகிறார்கள்.
2025 ஆம் ஆண்டில் அனைத்து முதலீடுகளையும் தூக்கி சாப்பிட்டு விட்டது தங்கம். இந்த ஆண்டு முதலீட்டாளர்களுக்கு பெருமளவிலான லாபத்தை தந்து திக்கு முக்காட வைத்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் எவ்வளவு லாபம் பெற்றிருக்கிறார்கள் என்பதை ஒப்பீடு செய்து பார்க்கலாம் .

2020 ஜனவரி 1ஆம் தேதி அன்று 1 லட்சம் ரூபாய்க்கு தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் 2025 நவம்பரில் எவ்வளவாக மாறி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் . 2020ஆம் ஆண்டு 24 கேரட் தங்கத்தின் விலை சராசரியாக ஒரு கிராமுக்கு 3 ,920 ரூபாய். அப்படி என்றால் 1 லட்சம் ரூபாய்க்கு 25.51 கிராம் தங்கத்தை வாங்கி இருக்க முடியும்.
தற்போது இந்தியாவில் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 12,584 ரூபாய் அப்படி என்றால் 2020 ஆம் ஆண்டு வாங்கிய 25.51 கிராம் தங்கத்தின் தற்போதைய மதிப்பு 3,21,017 ரூபாய். அதாவது 1 லட்சம் ரூபாய் மூன்று மடங்காக அதிகரித்து 3 லட்சமாக மாறி இருக்கிறது. தங்கத்தில் செய்த முதலீடு மும்மடங்காகி முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபம் ஈட்டி தந்துள்ளது.
அதே வேளையில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் செய்த முதலீடு என்ன ஆனது என பார்க்கலாம். ஆண்டுக்கு 12% லாபம் தந்த திட்டம் என வைத்து கொண்டால் 2020 ஜனவரி 1இல் மியூச்சுவல் ஃபண்டில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், தற்போது அதன் மதிப்பு 2.07 லட்சம் ரூபாய்.
கடந்த ஓராண்டு காலமாக இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதே மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் பெரிய அளவில் லாபம் ஈட்டி தராமல் இருப்பதற்கு காரணம். தங்கம், மியூச்சுவல் ஃபண்டு ஆகிய இரண்டு முதலீடுகளுமே சாதக பாதகங்களை கொண்டுள்ளன. தங்கம் விலை தொடர்ந்து ஏறும் ஆனால் எல்லா ஆண்டும் ஏறாது, உலக பொருளாதார சூழல் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஆண்டு தங்கத்தின் விலை உயர்வுக்கும் இதுதான் காரணம் . அதேவேளை குறைந்த தொகையில் உங்களுக்கு நீண்ட கால நோக்கில் சிறந்த செல்வத்தை உருவாக்கித் தர வேண்டும் என்றால் மியூச்சுவல் ஃபண்டுகள் தான் சிறந்தவை என்கின்றனர் நிபுணர்கள். முதலீட்டாளர்கள் தங்கம், மியூச்சுவல் ஃபண்டு என இரண்டிலும் முதலீடு செய்ய அறிவுரை வழங்குகின்றனர்.


Click it and Unblock the Notifications