ஈரான் போர் அமைதி பேச்சு வார்த்தை தொடர்பான குழப்பங்களுக்கு மத்தியில் தங்கம் விலை பெரிய அளவில் உயராமலும் குறையாமலும் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு உள்ளாகவே நீடித்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை இன்றைய தினம் தங்கம் விலையில் மாற்றமே இல்லை. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,300 ரூபாய்க்கு ஒரு சவரன் 1,14,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1,53,701 ரூபாயாக இருக்கிறது. ஈரான் போர் நீடிக்குமா , அமைதி பேச்சுவார்த்தை நடக்குமா என்பன போன்ற குழப்பங்கள் தான் தங்கத்தின் விலை இப்படி எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே வரம்புக்குள் நீடிப்பதற்கு காரணமாக இருக்கிறது. ஜனவரி மாதம் இந்தியாவிலும் சரி உலக அளவிலும் சரி தங்கம் வரலாற்று உச்சபட்ச விலையை எட்டியது. ஆபரண தங்கமே ஒரு சவரன் ஒரு 1,34,000 ரூபாய் வரை எட்டி தற்போது அதிலிருந்து சுமார் 20,000 ரூபாய் வரை சரிவடைந்து தான் காணப்படுகிறது.

பிப்ரவரி மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை பெரிய அளவில் மாற்றம் காணவில்லை. அதாவது கடந்த ஆண்டு வேகமாக உயர்ந்த தங்கம் தொடர்ந்து மூன்று மாதமாக ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. ஒரு அளவுக்கு மேல் தங்கம் விலை சரிவதாகவும் தெரியவில்லை. இந்த சூழலில் தான் தங்கம் தன்னுடைய அடுத்த அசுர வளர்ச்சிக்கு தயாராகிவிட்டது என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கான முக்கியமான நான்கு சிக்னல்கள் வந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கேடியா அட்வைசரிஸ் தங்கத்திற்கும் அமெரிக்க பங்குச் சந்தையின் எஸ்&பி 500 குறியீடுக்கும் இடையிலான விகிதத்தை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி பார்க்கும்போது தங்கம் பங்கு சந்தையை விட அதிக லாபம் தரக்கூடிய ஒரு முதலீடாக மாறப்போகிறது என தெரிவித்திருக்கிறது. அதாவது வரலாற்று ரீதியாக அதிகரித்த பணவீக்கம், குறிப்பிட்ட நாணயத்தின் மதிப்பிழப்பது குறித்த கவலைகள் அதிகரிப்பது, நிதி சார்ந்த நிச்சயமற்ற தன்மை உலகம் முழுவதும் தென்படுவது ஆகியவை தங்கத்தின் விலையை உயர்த்தும் என கூறுகிறது. இப்படிப்பட்ட சூழல் ஏற்படும் போதெல்லாம் முதலீட்டாளர்கள் நிதி சார்ந்த சொத்துக்களை விட பொருள் சார்ந்து சொத்துக்களை நோக்கி திரும்புவார்கள் என குறிப்பிட்டு இருக்கிறது.

அப்படி பார்க்கும்போது நிதி சார்ந்து சொத்துக்களான பங்குகளை விட பொருள் சார்ந்த சொத்துகளாக இருக்கக்கூடிய தங்கம் உள்ளிட்ட பொருட்கள் விலைகள் உயரப் போகின்றன என்பதையே இந்த சிக்னல்கள் குறிப்பிடுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதாவது தங்கத்திற்கும் எஸ்&பி 500 குறியீட்டிற்கும் இடையே 5 மாதத்திற்கான சார்ட்டினை ஒப்பீடு செய்து பார்க்கும்போது True Strength Index ஒரு அரிதான அறிகுறியை காட்டுகிறது. இவை அனைத்தையும் ஒப்பீடு செய்து பார்க்கும் போது தங்கம் தன்னுடைய அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகி வருவதாகவே புரிந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
1931 ஆம் ஆண்டிலிருந்து 1934 வரையிலான கிரேட் டிப்ரெஷன் காலத்தில் ஈக்விட்டி சந்தை வீழ்ச்சி அடைந்தது தங்கம் பிரதானமான ஒரு முதலீடாக மாறத் தொடங்கியது. அடுத்ததாக 1965 லிருந்து 1980 வரையிலான காலகட்டத்தில் வியட்நாம் போர் ஏற்பட்டது. உலக நிதி சந்தையே ஸ்தம்பித்து போனது அந்த சமயத்தில் தங்கத்தின் விலை உயர்ந்தது. 2001 முதல் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற டாட் காம் பபுள் மற்றும் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகும் தங்கத்தின் விலை உயர்ந்தது. அந்த மூன்று சமயங்களில் தென்பட்ட சிக்னல்கள் தான் தற்போதும் தென்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இதற்கிடையே அஜய் கேடியா தங்கம் விலை அடுத்து இரண்டு மூன்று மாதங்களில் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,100 டாலர்கள் வரை உயரும் என்றும் அதன் பிறகு அதிகபட்சமாக 8000 டாலர்கள் வரை செல்லும் என்றும் கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

