இந்திய பெற்றோருக்கு இருக்க கூடிய வாழ்க்கை கடமைகளில் முக்கியமானது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பு மற்றும் முதலீடு செய்வது. குழந்தைகளின் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய பெரும்பாலான பெற்றோர் குழந்தை பிறந்த உடனே முதலீட்டை தொடங்குவார்கள்.
பாரம்பரியமாக இந்திய குடும்பங்கள் நம்பும் ஒரு முதலீடு என்றால் அது தங்கம் தான். தற்போது தான் மியூச்சுவல் ஃபண்டு, பங்குச்சந்தை, போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகின்றன. இருந்தாலும் இன்னமும் இவற்றால் தங்கத்தின் இடத்தை பிடிக்க முடியவில்லை. தங்கம் மோசம் செய்யாத ஒரு முதலீடு என்பது இந்திய பெற்றோர் மனதில் இருக்கும் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை. தங்கம் விலை உயர்வும் அதற்கு சாதகமாகவே இருக்கிறது.

உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக தங்கத்தில் முதலீடு செய்வது சரியா, தங்கம் எந்த அளவிற்கு குழந்தைகளின் எதிர்காலத்திற்கு கைக்கொடுக்கும் என்பது குறித்து நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். தங்கம் தலைமுறை தலைமுறையாக பகிரப்படும் ஒரு சொத்து. பல்வேறு நாடுகளும் பொருளாதார நெருக்கடியை சந்தித்த போதும் இந்தியா அத்தகைய சூழலுக்கு செல்லாமல் தப்பியதற்கு இந்திய குடும்பங்கள் வசம் இருக்கும் தங்கமே காரணம்.
உலகளாவிய டிமாண்ட் காரணமாக தங்கத்தின் மதிப்பு எப்போதுமே பூஜ்ஜியத்திற்கு சென்றது இல்லை. சில மாதங்கள் சரிவில் இருந்தாலும் மீண்டு வந்து லாபத்தை தான் தரும். வங்கி சேமிப்புகள், பங்குச்சந்தை லாப விகிதங்கள் சில சமயம் பணவீக்கத்தினால் காலப்போக்கில் நமக்கு குறைந்த லாபத்தையே தரும் வாய்ப்புள்ளது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் தங்கம் வளர தான் செய்யும்.
எனவே, உங்கள் குழந்தைகளுக்கு தங்கத்தை சேமித்து வைப்பது, எதிர்காலத்தில் பணவீக்கத்தால் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாக்க உதவும். தங்கம் உலகின் அனைத்து நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சொத்து. அவசரத் தேவைகளின் போது தங்கத்தை உடனடியாக விற்று பணமாக மாற்ற முடியும் அல்லது அடகு வைத்து கடன் வாங்கலாம். வேறு எந்த ஒரு சொத்தையும் இத்தனை எளிதாக பணமாக மாற்ற முடியாது.

குழந்தையின் உயர்கல்வி செலவு, அவசர மருத்துவ செலவு, வீடு வாங்குவதற்கான முன்பணம் அல்லது திருமணம் போன்ற வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வுகளுக்கு தங்கம் உடனே பயன்படும். குழந்தை பிறந்த ஆண்டு முதல் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு பவுன் என்ற வீதத்தில் தங்கத்தை சேமித்து வந்தால் குழந்தையின் 18-வது பிறந்தநாளில் 18 பவுன் தங்கம் இருக்கும். இன்றைய தினம் 18 பவுன் தங்கத்தின் மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாய். 2008ஆம் ஆண்டில் ஒரு பவுன் தங்கத்தின் விலையே சுமார் 10 ஆயிரம் தான். ஆனால் இன்று 1.10 லட்சம் ரூபாய். சிறுக சிறுக சேமித்திருந்தால் கூட நாம் செய்த முதலீட்டை விட பல ம்டங்கு லாபமே இப்போது கிடைத்திருக்கும்.இந்த தங்கம் பெரிய பொருளாதார பாதுகாப்பை உங்கள் பிள்ளைகளுக்கு தரும்.
உதாரணமாக குழந்தை பிறந்தநாளில் ஒரு நகை சீட்டு போடலாம். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் இதனை தவறாமல் தொடரலாம். தங்க நகை வாங்குவோருக்கு இது சேமிப்பை தரும். இல்லையெனில் பிறநத்நாளில் தங்க நாணயம் வாங்கி சேமிக்கலாம்.
ஆனால் தங்கத்தில் முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. நீங்கள் தங்கத்தை நாணயம், தங்க கட்டி அல்லது நகையாக வாங்கினால் அந்த தங்கம் ஹால்மார்க் முத்திரை கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் அதனை பணமாக்க முயலும் போது ஹால்மார்க் இல்லாததால் நினைத்த பணம் கிடைக்காமல் போகலாம்.
தற்போது தங்கத்தை நகையாக வாங்கி சேமிப்பதற்கு பதிலாக கோல்டு ஈடிஎஃப் போன்ற நிறைய ஆப்ஷன்கள் வந்துவிட்டன. அவற்றையும் முயற்சி செய்து பார்க்கலாம். இதில் தங்கத்தை வாங்கி பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற தேவை இல்லை. அதாவது திருட்டு பயம் இல்லாமல் தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்.
தங்கத்தை வைத்து உலக நாடுகளும் பெரும் அரசியல் செய்ய தொடங்கி இருப்பதால் முழுவதுமாக தங்கத்தை மட்டுமே நம்பாமல், கணிசமான பணத்தை பிரித்து தங்கம், பத்திரங்கள், பங்குச்சந்தைகள் , மியூச்சுவல் ஃபண்டுகள் என போட்டு வைக்கலாம். மேலும் தங்கத்தை குறுகிய கால முதலீடாக பார்க்காமல், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட நீண்ட கால சேமிப்பாக கருத வேண்டும். அப்போதுதான் நல்ல லாபத்தை பெற முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
குழந்தைகளின் எதிர்கால நிதி பாதுகாப்பிற்கு தங்கம் ஒரு மிக சிறந்த பாதுகாப்பு அரண். ஆனால் அதனை முறையாக திட்டமிட்டு மற்ற முதலீடுகளுடன் இணைத்து சேமிப்பது இன்னும் நல்லது என்பது தான் நிபுணர்களீன் பரிந்துரை.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

