தங்கம் விலை யாரும் எதிர்பாராத வகையில் மிக வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏற்றம் என செய்தி கேட்டு வந்த மக்களுக்கு தற்போது ஒவ்வொரு நாளும் தங்கம் விலை வீழ்ச்சி என்ற செய்தி கிடைக்கிறது. தங்கம் விலை இதற்கு முன்பு இப்படி சரிந்திருக்கிறதா? அவ்வாறு விலை சரிந்த போதெல்லாம் மீண்டு வந்துள்ளதா என்ற வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் இன்று சில்லறை விற்பனையில் 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் 13,069 ரூபாய்க்கும் 10 கிராம் தங்கம் 1,30,690 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 11,980 ரூபாய்க்கும், ஒரு சவரன் 95,840 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது., எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராம் 1,30,921 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.

FundsIndia Research ஆய்வின்படி, 2026-ஆம் ஆண்டில் அக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில் தங்கம் விலை 25 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது 1980-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான வரலாற்று தரவுகளில் பார்க்கும் போது மிக கடுமையான வீழ்ச்சி என கூறுகிறது. இது இடைக்கால ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.
அதாவது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் முந்தைய உச்ச விலையிலிருந்து விலை எவ்வளவு தூரம் கீழே இறங்கியது என்பதை குறிக்கும் அளவீடு இது, டிசம்பர் மாதத்தில் விலை எங்கு நிறைவடைகிறது என்பதை பொருட்படுத்தாமல் இது கணக்கிடப்படுகிறது. ஒரு முழு ஆண்டுக்கான( ஜனவரி - டிசம்பர்) வரையிலான கணக்கு இதுவல்ல.
அப்படி பார்த்தால் இந்த ஆய்வில் மிக கடுமையான வீழ்ச்சி 1980இல் ஏற்பட்டது, அப்போது தங்கம் உச்சத்திலிருந்து 40 சதவீதம் சரிந்தது. அடுத்ததாக 1981இல் 25 சதவீத சரிவு ஏற்பட்டது. அதன் பின்னர் 2026ஆம் ஆண்டில் தான் இத்தகைய சரிவு ஏற்பட்டுள்ளது. இப்படி விலை திருத்தம் ஏற்பட்ட போதெல்லாம் அதன் பின் தங்கம் விலை என்ன ஆனது என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதாவது இடைக்கால ஆண்டு விலை வீழ்ச்சியையும் , ஒட்டு மொத்தமாக ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான விலையையும் ஒப்பிட்டு பார்த்தால் விலை பாசிடிவாகவே முடிந்திருக்கிறது என இந்த ஆய்வு கூறுகிறது. 1980இல் இடைக்கால ஆண்டில் விலை 40% சரிந்தது, ஆனால் மொத்த காலண்டர் ஆண்டில் 4% வளர்ச்சி அடைந்திருந்தது. அதே போல 2008இல் இடைக்கால ஆண்டில் 20% வீழ்ந்த தங்கம், ஆண்டின் முதல் நாள் மற்றும் கடைசி நாளுடன் ஒப்பிட்டால் 28% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. 2020இலும் இடைக்கால ஆண்டில் 15% சரிந்த தங்கம், மொத்த காலண்டில் ஆண்டில் 28% வளர்ச்சியை தந்திருந்தது.
எனவே இதுவரை 25% சரிந்துள்ள தங்கம் 2008 மற்றும் 2020ஐ போலவே ஆண்டு இறுதியில் லாபத்துடன் முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் தங்கத்தை எப்போதும் விலை ஏறும் பொருளாகவே பார்க்க கூடாது என்கின்றனர் நிபுணர்கள். பொதுவாகவே தங்கம் விலை எப்படி ஏற்றம் அடைகிறதோ அதே போல சரிவையும் சந்திக்கும் என்பதை தான் வரலாற்று தரவுகள் நமக்கு உணர்த்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே இப்போது விலை சரிந்துள்ளது நிச்சயம் இது மீண்டு வரும், ஆனால் அதற்கு ஒரு காலம் தேவைப்படும் என்கின்றனர். எனவே கடுமையான விலை சரிவின் போது தங்கம் வாங்குவோர், விலை விரைவாக மீண்டுவிடும் என்று கருதாமல், குறுகிய கால ஏற்ற இறக்கம் பின்னர் ஏற்றம் என்ற நிலைக்கு தயாராக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்குகின்றனர். தங்கம் விலை உச்சத்தில் இருந்த போது முதலீடு செய்தவர்கள் அவசர அவசரமாக அதனை நஷ்டத்தில் எடுக்காமல் காத்திருக்கலாம் என அறிவுரை வழங்குகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

