தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே தற்போது விலைசரிவில் தான் இருக்கின்றன. தீபாவளி பண்டிகை, முகூர்த்தம் போன்றவை வருவதால் தங்கம் விலை இன்னமும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது.
உலக சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் தான் இந்தியாவிலும் தங்கம் விலையில் மாற்றத்தை கொண்டு வருகின்றன. உலக சந்தையில் விலை ஏறினால் இந்தியாவிலும் விலை ஏறும். இன்று 24 கேரட் தங்கம் ஒரு அவுன்ஸ் விலை 4,000 டாலர்கள் என சரிவில் தான் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் வெள்ளி விலை 2% சரிந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 53.27 டாலராக உள்ளது.

அதுவே இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் பார்த்தால் டிசம்பர் மாத Gold Futures 10 கிராம் 1,42,500 ரூபாய் என்ற விலையில் இருக்கிறது. டிசம்பர் மாத வெள்ளி ஃபியூச்சர்ஸ் ஒரு கிலோவுக்கு 1,94,415 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகிறது. அதுவே சில்லறை விற்பனையில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1,43,290 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.20 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இந்நிலையில் கேடியா அட்வைசரி நிறுவனத்தின் மூத்த தலைவர் அமித் குப்தா பிஸ்னஸ் டுடேவுக்கு அளித்துள்ள பேட்டியில், எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1,40,000 முதல் 1,44,000 ரூபாய் வரை வர்த்தகமாகி வருவதாக தெரிவித்தார். டாலரின் வலிமை மற்றும் உலகளாவிய பொருளாதார நிலை குறித்த நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக தங்கம், வெள்ளி விலைகள் அழுத்தத்தை சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தங்கம் விலையானது எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராமின் விலை 1,44,000 முதல் 1,46,000 ரூபாய் வரை உயரக்கூடும் என்றும், அடுத்ததாக விலை சரிந்தால் 10 கிராம் தங்கத்தின் விலை 1,38,000 ரூபாய் வரை செல்லலாம் என கூறுகிறார். அதற்கும் கீழ் சென்றால் இன்னும் விலை சரியும் என்றும் இல்லை என்றால் அங்கே இருந்து மீண்டு வந்து விலை ஏற்றம் அடையும் என்றும் கூறியுள்ளார். அதாவது தற்போதுள்ள விலையை விட எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமுக்கு இன்னும் 4000 ரூபாய் வரை சரிய வாய்ப்புள்ளது என்கிறார்.
வெள்ளியை பொறுத்தவரை ஒரு கிலோ 1.88 லட்சம் வ்பரை சரிந்து பின்னர் 2 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளது என கணித்துள்ளார். உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளை கவனித்து முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டு நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மத்திய வங்கி கூட்டம், இன்றும் நாளையும் நடக்கிறது, இதில் எடுக்கப்படும் முடிவுகள் தீபாவளிக்குள் தங்கம் விலை என்ன ஆகும் என்பதை தீர்மானிக்கும் ஒரு காரணியாக இருக்கும் என சுட்டிக்காட்டுகிறார். அந்த வகையில் அடுத்த 2 நாட்கள் தங்கம் , வெள்ளி முதலீட்டாளர்களுக்கு முக்கியமான நாளாக இருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

