தங்கம் வாங்குங்க, தங்கத்தில் முதலீடு செய்யுங்க ஆனா எல்லா பணத்தையும் அதுலயே போட்டு வைக்காதீங்க. இப்படி தான் பலரும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கி நம்மை குழப்பி விடுகிறார்கள். இதனால் தங்கம் வாங்க வேண்டும் ஆனால் எவ்வளவு வாங்க வேண்டும் என தெரியாமல் பலரும் குழம்புகிறோம். ஆனால் இனி அந்த சிக்கலே இல்லை.
ஒரு நபர் தன்னுடைய முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் தங்கத்தை எவ்வளவு வைத்திருக்க வேண்டும் என்பதை மிக எளிமையாக கண்டுபிடிக்கலாம். செபி பதிவுபெற்ற முதலீட்டு ஆலோசகர் அலோக் ஜெயின் இதற்கான ஒரு எளிய வழிமுறையை பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ தான் சமூக வலைதளங்களில் டிரெண்டாக உள்ளது.

சஞ்சய் கதூரியாவின் வீக் எண்ட் இன்வெஸ்டிங் என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அலோக் ஜெயின் ஒவ்வொரு நபரும் தன் வயதை கொண்டே எவ்வளவு தங்க முதலீடு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம் என கூறுகிறார். இதன்படி, உங்கள் வயதை இரண்டால் வகுத்தால் வரும் விடைதான் உங்கள் மொத்த முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் தங்கத்திற்கு ஒதுக்க வேண்டிய சதவீதம் என்கிறார்.
அதாவது உங்களுக்கு 30 வயது என்றால், 30 ÷ 2 = 15. எனவே உங்கள் முதலீட்டில் 15% தங்கத்தில் இருக்க வேண்டும். இதுவே உங்களுக்கு 40 வயது என்றால், 40 ÷ 2 = 20. அதாவது, உங்கள் முதலீட்டில் 20% தங்கத்தில் இருக்க வேண்டும்.
வயது அதிகரிக்க அதிகரிக்க, உங்கள் போர்ட்ஃபோலியோவில் தங்கத்தின் அளவும் படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என்பதையே இது கூறுகிறார். 30 வயதாகும் ஒரு நபர் 20 லட்சம் ரூபாய் முதலீடு போர்ட்ஃபோலியோ வைத்திருக்கிறார் என்றால் அதில் 15% , அதாவது 3 லட்சம் ரூபாயை தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
மேலும் வெள்ளியை ஒரு போர்ட்ஃபோலியோ முதலீடாக பார்க்க கூடாது என சஞ்சய் கத்துரியா கூறுகிறார் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கள் அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தை தான் சேமிக்கின்றன. ஏனெனில் தங்கம் தான் பணத்தின் மதிப்பை நிலைநிறுத்த உதவுகிறது. ஆனால், வெள்ளி தொழிற்சாலைகளில் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது . இதனால் தான் வங்கிகள் வெள்ளி வாங்குவதில்லை மக்களும் அதனை பின்பற்றலாம் என கூறுகிறார். வெள்ளியின் விலை தொழில்துறை தேவைகளைப் பொறுத்தே மாறுகிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
நீங்கள் தங்கம் வாங்கி இருந்தால் தற்போதைய விலை இறக்கத்தை கண்டுகொள்ளாமல் நீண்ட கால வளர்ச்சிக்கு அதனை விட்டுவிட வேண்டும் என அவர் கூறுகிறார். அதே போல அவ்வப்போது போர்ட்ஃபோலியோவை ரீபேலன்ஸ் செய்தால் நல்ல ரிட்டர்ன்ஸ் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகும் என கூறுகிறார். உங்கள் போர்ட்ஃபோலியோவில் 20% தங்கத்திற்கு இலக்கு வைத்துள்ளீர்கள் என்று வைத்து கொண்டால் தங்கத்தின் விலை உயர்ந்து, அந்த மதிப்பு போர்ட்ஃபோலியோவில் 30% ஆக உயர்ந்தால், கூடுதல் லாபத்தை விற்றுவிட்டு மீண்டும் 20% என்ற இலக்குக்கே அதை கொண்டு வர வேண்டும். இதுவே சரியான முதலீட்டு மேலாண்மை என கூறுகிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

