நாட்டில் பண மோசடி மற்றும் டிஜிட்டல் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வங்கிக் கணக்குகள், யுபிஐ, டெபிட்/கிரெடிட் கார்டுகள், சிம் கார்டுகள் மற்றும் ஆன்லைன் மூலம் பல்வேறு மோசடிகள் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. எனவே, இதனால் மக்கள் பலரும் தங்கள் பணத்தையும், தனிப்பட்ட தகவல்களையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மின்னஞ்சல் வழியாகவும், தொலைபேசி வழியாகவும், எஸ்.எம்.எஸ். வழியாகவும் அதிக மோசடிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதில், வங்கியினர் பேசுவது போன்ற மோசடிகள், ஓடிபி, பின் நம்பர் போன்ற உங்களின் ரகசிய தகவல்களை பெற்று, வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடி வருகின்றனர். அதேபோல், கியூஆர் கோடு மூலம் பணம் திருடும் மோசடிகள், லோன் மோசடி, ஏடிஎம் மோசடி, வேலைவாய்ப்பு மோசடி என பல்வேறு வகைகளில் மோசடிகள் நடந்து வருகிறது.

இந்த சூழலில் தான், PIB Fact Check நிறுவனம் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், வருமான வரி செலுத்துவோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மாத சம்பளம் வாங்குவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15 ஆகும். எனவே, வரி செலுத்துவோர் தற்போது ஐடிஆர் தாக்கல் செய்து வருகின்றனர். ஆனால், இதைப் பயன்படுத்தி மோசடி கும்பல்களும் உங்கள் பணத்தை திருட தொடங்கிவிட்டனர்.
இந்த மோசடி கும்பல், பல்வேறு வகையான செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பி வரி செலுத்துவோரை மோசடி வளையில் சிக்க வைத்து வருகின்றனர். ஆனால், இதுபோன்ற மின்னஞ்சல்கள் வருமான வரித்துறையால் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படவில்லை என்றும், வரி செலுத்துவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
PIB Fact Check கூற்றுப்படி, வரி செலுத்துவோருக்கு செய்திகள் அல்லது மின்னஞ்சல்கள் மூலம் உங்களின் அடையாள உறுதி கோரப்படுகிறது. மேலும் அதில், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரி செலுத்துவோருக்கு ரூ.50 ஆயிரம் வரை பணம் திரும்ப தரப்படும் என்றும் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.
எனவே, இதற்காக அந்த கும்பல் ஒரு லிங்கையும் கொடுத்துள்ளனர். நீங்கள் அதைக் கிளிக் செய்தால், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மோசடி செய்வோரின் கைகளில் விழுந்து, மொத்த பணத்தை காலி செய்துவிடுவார்கள். வருமான வரித் துறை இதுபோன்ற மின்னஞ்சல்கள் மூலம் தனிப்பட்ட தகவல்களை எப்போதும் கேட்காது. மேலும், இதுபோன்ற மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க கூடாது. ஏனெனில், உங்கள் தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. அதேபோல், தெரியாத எந்தவொரு இணைப்பையும் திறக்கக் கூடாது. இது வைரஸாக இருக்கும்பட்சத்தில் உங்கள் கணினியை சேதப்படுத்தும். நீங்கள் சந்தேகம்படும்படி ஏதேனும் மின்னஞ்சல் உங்களுக்கு வந்தால், உடனே https://incometaxindia.gov.in/pages/report-phishing.aspx இல் புகாரளிக்கலாம்.
குறிப்பாக, வருமான வரித் துறையால் அனுப்பப்படும் அனைத்து செய்திகளும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது e-filing portal மூலமாக மட்டுமே வரும் என்பதை எப்போதும் மறந்துவிட வேண்டாம். ஏற்கனவே, இதுபோன்ற மோசடி சம்பவங்களை தடுக்க அரசு மற்றும் வங்கிகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. ஆனாலும், ஒவ்வொருவரும் தங்களது தகவல்களை பாதுகாப்பது தான் முதன்மையானது.


Click it and Unblock the Notifications