தங்கத்தையும் இந்தியர்களையும் அத்தனை சீக்கிரம் பிரிக்க முடியாது. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்திய குடும்பங்களின் முக்கியமான முதலீடாகவும் சொத்தாகவும் தங்கம் தான் உள்ளது. அதுவும் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை குறைந்துவரும் நிலையில் இந்தியாவில் தங்கம் விற்பனை குறித்த ஆச்சர்யம் தரும் தகவலை உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ளது.
உலக தங்கம் கவுன்சில் இந்திய தங்க சந்தை நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் டிஜிட்டல் தங்கம் வாங்குவது புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக கூறியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் வாங்கப்பட்ட டிஜிட்டல் தங்கத்தின் மொத்த மதிப்பு 2,590 கோடி ரூபாயை எட்டியுள்ளதாம். இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 83% வளர்ச்சி. மேலும் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 4% அதிகமாகும்.

கடந்த ஆண்டில் டிஜிட்டல் தங்கம் முதலீட்டின் மதிப்பு 9 டன்களாக இருந்து இந்த ஆண்டு 16.3 டன்களாக உயர்ந்துள்ளது. இந்தியர்கள் தங்கம் என்றாலே நகை, நாணயம், கட்டிகளாக தான் வாங்குவார்கள் என்ற நிலை முற்றிலும் மாறி, டிஜிட்டல் தங்கம், கோல்டு ஈடிஎஃப், கோல்டு மியூச்சுவல் ஃபண்டு என பல வழிகளில் மக்கள் நம்பிக்கையுடன் தங்கம் வாங்க தொடங்கியுள்ளனர்.
அதுவும் வரலாற்று உச்சபட்ச விலையுடன் ஒப்பிடுகையில் தங்கம் விலை 30000 ரூபாய் குறைந்துள்ளது. மீண்டும் தங்கம் விலை வரலாற்று உச்சத்தை தொடுவதற்குள் விலைகுறைவு வாய்ப்பை பயன்படுத்தி முதலீடு செய்து கொள்ளலாம் என மக்கள் தங்க முதலீட்டை அதிகரிக்க தொடங்கி இருப்பது இதற்கு முக்கிய காரணம்.
டிஜிட்டல் தங்கம் பொதுமக்கள் எளிய முறையில் ஆன்லைன் வாயிலாக சிறிய தொகையில் தங்கத்தை வாங்க அனுமதிக்கிறது. வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்கம், பாதுகாப்பான வாலட்களில் பாதுகாக்கப்படுகின்றன. நாம் தேவைப்படும் போது அந்த தங்கத்தை கட்டிகளாக பெற்று கொள்ளலாம் அல்லது விற்று பணமாக்கி கொள்ளலாம். ஆனால் இது செபி கட்டுபாட்டின் கீழ் வருவதில்லை.
கோல்டு ஈடிஎஃப்கள் சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீட்டு முறை. முதலீட்டாளர்கள் டிமேட் கணக்கு மூலம் பங்கு சந்தையில் கோல்டு ஈடிஎஃப் யூனிட்டுகளை வாங்கலாம், விற்கலாம். இவை முறைப்படுத்தப்பட்ட பத்திரங்களாகும். செபியின் சட்ட ரீதியான பாதுகாப்பினை தருகிறது. 100 ரூபாய் முதலே இதில் தங்கம் வாங்கலாம். ஆனால் இதனை தங்க கட்டி, நாணயமாக மாற்ற முடியாது. பங்குச்சந்தை நடக்கும் போது விற்று பணமாக்கலாம்.
நகைகள், நாணயங்கள் மற்றும் கட்டிகள் வடிவில் தங்கத்தை வாங்கும் போது செய்கூலி மற்றும் சேதார செலவுகள், அதனை பாதுகாப்பாக பராமரிக்க லாக்கர் செலவுகள் ஆகியவை சிக்கல்கள் உள்ளன. ஆனால் டிஜிட்டல் கோல்டு , ஈடிஎஃப் திட்டங்களில் அந்த பிரச்சினை இல்லை. இணைய வசதி மற்றும் மொபைல் செயலிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால், எப்போது வேண்டுமானாலும் இதில் தங்கம் வாங்கும் மற்றும் விற்கும் வசதி கிடைக்கிறது.
ஜென் ஸீ தலைமுறையினர், சிறிய தொகையில் முதலீடு செய்ய டிஜிட்டல் தங்கம் முறையை அதிகம் விரும்புகின்றனர். இதனால் தான் தங்கத்தை நகை, நாணயமாக வாங்கும் போக்கு குறைந்து டிஜிட்டல் முறையில் வாங்குவது அதிகரித்து வருகிறது. அது மட்டுமில்லாமல் குறைந்த தொகைக்கே இதில் தங்கம் வாங்கலாம், விலை ஏறும் போது விற்று பணமாக்கி கொள்ளலாம். போனிலேயே இந்த வேலை அனைத்தும் முடிவதால் இளைஞர்களுக்கு பிடித்தமான ஒரு முதலீட்டு வடிவமாக டிஜிட்டல் வடிவ தங்கம் மாறி வருகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

