2020ல் உலக நாடுகளில் கொரோனா தொற்றுக் காரணமாக வர்த்தகம் மற்றும் உற்பத்தி சந்தை முழுமையாக முடங்கிய காரணத்தால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாக்க வேறு வழி இல்லாமல் பயத்தில் 90 சதவீத முதலீட்டைத் தங்கம் மீது திருப்பினர்.
முதலீட்டாளர்களின் இந்தச் செயலால் முதலீடு காப்பாற்றப்பட்டது மட்டும் அல்லாமல் தங்கம் விலை உயர்ந்து அதிகளவிலான லாபத்தைக் கொடுத்தது.
முதலீட்டாளர்களைக் காப்பாற்றிய தங்கம்
முதலீட்டுச் சந்தையில் ஆபத்தான காலகட்டத்தில் எப்போதும் முதலீட்டாளர்களையும், மக்களையும் காப்பாற்றும் தங்கம் 2020லும் காப்பாற்றியுள்ளது என்றால் மறுக்க முடியாது. இந்தக் காலகட்டத்தில் தங்கம் விலை அதிகரித்த காரணத்தால் மக்கள் கையில் இருந்து தங்கத்தை விற்பனை செய்து அதிகளவிலான லாபத்தைப் பார்த்தனர். சில முக்கிய நாடுகளும் நிதிநிலையை மேம்படுத்தக் கருவூலத்திலிருந்த தங்கத்தை விற்பனை செய்ததும் நடந்தது.
2020ல் தங்கம் விலை
இந்த வகையில் ஜனவரி 1ஆம் தேதி 3,500 ரூபாய்க்கு ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் 2020 அதிகப்படியாக 5,500 ரூபாய் வரைக்கும் சென்றது. ஆனால் இன்று 4,932 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா பாதிப்புக் குறைந்தது
தற்போது உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்த காரணத்திற்காகவும், கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்ட காரணத்தின் எதிரொலியாக முதலீட்டாளர்கள் திரும்பவும் பங்குச்சந்தையிலும் பிற முதலீட்டுச் சந்தைக்கும் திரும்பிய காரணத்தால் தங்கம் விலை சரியத் துவங்கியுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து
இதேபோல் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் மக்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்த அரசு அனுமதித்துள்ள நிலையில் உலகம் முழுவதும் அடுத்தச் சில மாதத்தில் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தை சரிவில் இருந்து முழுமையாக மீண்டு வளர்ச்சிப் பாதைக்குச் செல்ல தயாராக உள்ளது. இதனால் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
தங்கம் இறக்குமதி
இதற்கு முக்கிய உதாரணம் பொதுவாகவே இந்தியாவில் பொதுவாகவே பண்டிகை காலமான நவம்பர் மாதத்தில் தங்கம் விற்பனை மிகவும் அதிகமாக இருக்கும். இதற்காக வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படும்.
மக்களின் நிலை
நவம்பர் மாதத்தில் இறக்குமதி செய்யப்படும் தங்கம் கிட்டதட்ட 90 சதவீதம் ரீடைல் சந்தை விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் இந்த முறை இறக்குமதி அளவீடு மிகவும் குறைவாக இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் கொரோனாவால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவும், தங்கம் விலை குறையும் என்ற நம்பிக்கையும் தான்
இறக்குமதியில் 41 சதவீதம் சரிவு
கொரோனா பாதிப்பின் எதிரொலியாகவும், தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதன் காரணமாகவும் நவம்பர் மாதத்தில் தங்கம் இறக்குமதி எப்போதும் இல்லாமல் சுமார் 41 சதவீதம் குறைந்துள்ளது.
நம்பிக்கை
இதனால் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் வெறும் 33.1 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 48 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களும் தங்கம் விலை குறையும் என்ற நம்பிக்கையில் இதன் மீது முதலீடு செய்ய மனம் இல்லாமல் உள்ளனர். இதுதான் தங்கம் மீதான முதலீட்டு மீது மக்களின் கண்ணோட்டம்.


Click it and Unblock the Notifications