உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாற்று உச்சத்தில் இருந்து சரிந்துள்ள நிலையிலும் தங்கத்தை வாங்கி வைப்பவர்கள் தான் எதிர்காலத்தில் பிழைக்க முடியும் என பிரபல முதலீட்டாளரும், கமாடிட்டி சந்தை நிபுணருமான ஜிம் ரோஜர்ஸ் தெரிவித்துள்ளார். தங்கம் மற்றும் வெள்ளி முதலீடு குறித்து அவர் பிஸ்னஸ் டுடேவுக்கு அளித்துள்ள பேட்டி பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
முதலீட்டு நிறுவனங்களை நடத்தி வரும் ஜிம் ரோஜர்ஸ் , ஒவ்வொரு நபரும் தன்னால் இயன்ற அளவு தங்கத்தை வாங்கி பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என கூறியுள்ளார். உலக நாடுகள் தொடர்ந்து பணத்தின் மதிப்பை வீழ்ச்சியடைய செய்து வருவதால் (Currency Debasement), தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களே எதிர்காலத்தில் தலைசிறந்த சொத்துக்களாக விளங்கும் என கூறியுள்ளார்.

ரோஜர்ஸ் இன்டர்நேஷனல் கமாடிட்டி இன்டெக்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஜிம் ரோஜர்ஸ், நான் எப்போதும் கூறுவது ஒன்று தான், ஒவ்வொருவரும் தங்கத்தையும், வெள்ளியையும் வைத்திருக்க வேண்டும், அது தான் பின்னாளில் அவர்களை காப்பாற்றும் என கூறியுள்ளார்.
என்னுடைய வீட்டிலும் நான் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கி கட்டிலில் நிரப்பி வைத்திருக்கிறேன் என கூறி இருக்கும் அவர், இவற்றை நான் எப்போதுமே விற்கப் போவதில்லை என்றும், விலை குறையும் போதெல்லாம் இன்னமும் தங்கம், வெள்ளியாக வாங்கி சேகரிக்க போகிறேன் என்றும் கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை உச்சத்திலிருந்து குறைந்து தற்போது சுமார் 4,000 டாலர் என்ற நிலைக்கு வந்துள்ளது. இது தற்காலிகம் தான் என கூறும் அவர் எதிர்கால விலை நிலவரங்களை துல்லியமாக கணிக்க நான் விரும்பவில்லை ஆனால், தங்கம் ஒரு போதும் நம்மை மோசம் போக வைக்காது என தெரிவித்துள்ளார்.
விலை மலிவாகும்போது தன்னால் முடிந்தவரை கூடுதல் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கியுள்ளதாகவும், விலை குறையும் போதெல்லாம் தொடர்ந்து வாங்குவதே புத்திசாலித்தனம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்களுக்கு கரன்சிகளின் (நாணயங்களின்) மதிப்பை எப்படி குறைப்பது என்பது நன்றாக தெரியும்; அவர்கள் கடந்த காலத்திலும் அதை செய்தார்கள், இப்போதும் தொடர்ந்து செய்து வருகிறார்கள் ஆனால் அவர்களால் தங்கத்தின் மீது கை வைக்கவே முடியாது என தெரிவிக்கும் அவர் பணத்தின் மதிப்பு குறையும் போது தங்கம் பாதுகாப்பான புகலிடமாக செயல்படும் என்கிறார்.
தங்கத்தை நாணயங்களாகவும் கட்டிகளாகவும் வாங்கி சேர்க்கவே நான் விரும்புகிறேன் பேப்பர் முதலீடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என கூறியுள்ளார். பொதுமக்களும் விலை குறையும் போதெல்லாம் தங்கம் வாங்கி வைக்க வேண்டும் என அறிவுரை வழங்குகிறார். அதுவும் டிஜிட்டல் மற்றும் ஈடிஎஃப்களாக இல்லாமல் தங்க நாணயமாக வாங்க அறிவுறுத்துகிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

