2026 ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை பல மடங்கு உயருமா என்ற குழப்பம் சாமானிய மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இருந்து வருகிறது. இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை தொடர்பான தன்னுடைய கணிப்புகளை கோடக் செக்யூரிட்டிஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
நிச்சயமாக அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை உயரும் என அடித்து கூறி இருக்கிறது கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனம். இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்ற விலையை எட்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது . கோடக் நிறுவனத்தின் அறிக்கையில் உலக அளவில் தங்கத்தின் விலை உயர்த்துவதற்கான பல காரணங்கள் அப்படியே இருக்கின்றன என கூறியிருக்கிறது.

அமெரிக்க மத்திய வங்கி அடுத்த ஆண்டு வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது. பல்வேறு நாட்டு பொருளாதாரத்திலும், ஏற்கனவே நிதி பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது இதுவும் புவிசார பதட்டங்கள் மற்றும் பல்வேறு நாட்டு வங்கிகள் தங்கத்தை வாங்கி வைக்கும் போக்கு ஆகியவை தங்கத்தின் விலையை உயர்த்தும் என கூறியிருக்கிறது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5 ஆயிரம் டாலர்கள் என்ற அளவையும் இந்தியா சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 1.5 லட்சம் ரூபாய் என்ற விலையையும் எட்டும் என உறுதிப்பட தெரிவித்து இருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை வட்டியை குறைத்து இருக்கிறது, அடுத்த ஆண்டிலும் அது தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. இதனால் மற்ற முதலீடுகள் அனைத்தையும் விட நல்ல லாபம் தருபவையாக தங்கம் தொடர்ந்து நீடிக்கிறது என கூறுகிறது .
அமெரிக்க மத்திய வங்கியை பின்பற்றி பல நாடுகளும் வட்டி குறைப்பை மேற்கொள்ளலாம் என கணிக்கப்படுகிறது. இது தவிர சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்களுடைய இருப்பில் அமெரிக்க டாலரை குறைத்து விட்டு அதற்கு மாற்றாக தங்கத்தை வாங்கி வைக்கிறார்கள், இதனால் டாலரின் மதிப்பு படி படியாக குறைந்து வருகிறது இதுவும் தங்கத்தின் விலையை உயர்த்தும் என கூறி இருக்கிறது.
2025 ஆம் ஆண்டில் மட்டும் தங்கம் 50 முறை தன்னுடைய வரலாற்று உச்சபட்ச விலைகளை எட்டி இருப்பதாக அது தெரிவித்திருக்கிறது . இந்தியாவில் தங்கத்தின் விலை 60% வரை உயர்ந்திருப்பதாகவும் சர்வதேச காரணிகள் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்றும் கோடக் அறிக்கை தெரிவித்திருக்கிறது. வரலாற்று உச்சத்தை எட்டிவிட்டதன் காரணமாக தற்போது தங்கத்தின் விலை திருத்தத்தில் இருப்பதாகவும் அடுத்த ஆண்டு தொடக்க முதல் மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி இருக்கும் என்றும் திட்டவட்டமாக கூறுகிறது.


Click it and Unblock the Notifications