மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் தாக்கல் செய்த 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், டிடிஎஸ் (மூலத்தில் கழிக்கப்படும் வரி) விதிகளில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டது. டிவிடெண்ட், லாட்டரி வெற்றிகள், கமிஷன்கள் அல்லது தரகு, மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களின் பரிமாற்றம், வாடகை மற்றும் தொழில்துறை அல்லது தொழில்நுட்ப சேவைகளுக்கான கட்டணங்களுக்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய டிடிஎஸ் விதிகள் தனிநபர்களுக்கு ஆதாயம் அளிப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இது தொடர்பாக பாம்பே பட்டயக் கணக்காளர் சங்கத்தின் செயலாளர் சிஏ மற்றும் வழக்கறிஞர் கிஞ்சல் பூட்டா கூறியதாவது:

2025ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், டிடிஎஸ் பொருந்தக் கூடிய வரம்புகளில் நிறைய மேல்நோக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. டிவிடெண்ட் வருமானத்தில் டிடிஎஸ் வரம்பு ரூ.5,000லிருந்து ரூ.10,000ஆக மாற்றப்பட்டது. பங்குச் சந்தையில் குறைந்த தொகையை முதலீடு செய்யும் தனிநபர்களுக்கு இது நன்மை அளிக்கும். அதேபோல், நிறுவனங்களுக்கும் இது இணக்க சுமையை குறைக்கலாம் மற்றும் ஓரளவுக்கு நன்மை அளிக்கும்.
லாட்டரிகள், விளையாட்டுகள், குதிரை பந்தயங்கள் போன்றவற்றில் வெற்றி பெறுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, முழு நிதியாண்டில் அத்தகைய வருமானத்திற்கான வரம்பு ரூ.10,000ஆக இருந்தது. இது ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.10,000ஆக தாராளமயமாக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் குறைந்தபட்சம் ரூ.10,000 பெற்றால் மட்டுமே டிடிஎஸ் பிடிக்கப்படும்.
வங்கி பிக்சட் டெபாசிட்டுகள், வங்கி போன்ற பிற பத்திரங்களின் மீதான வட்டி வருவாய் மீதான டிடிஎஸ் வரம்பு ரூ.50,000லிருந்து ரூ.1,00,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டிடிஎஸ் வரம்பில் ஏற்படும் அதிகரிப்பு, வட்டி வருமானத்தில் டிடிஎஸ் கழிக்கப்பட்டதால் பணத்தை திரும்ப பெறுவதற்காக மட்டுமே தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்த பல மூத்த குடிமக்களின் வருமான வரி கணக்கு தாக்கல் இணக்கத்தையும் மறைமுகமாக குறைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். புதிய டிடிஎஸ் விதிமுறையின்படி, 194J பிரிவில், தொழில்முறை அல்லது தொழில்நுட்ப சேவைகளுக்கான கட்டணங்கள் ஒரு நிதியாண்டில் ரூ.30,000 என்பதை மாதத்துக்கு ரூ.50,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 194H பிரிவின் கீழ், கமிஷன் மற்றும் தரகு கட்டணங்கள் ரூ.15,000லிருந்து ரூ.20,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
194I பிரிவின் கீழ், வாடகைக்கான டிடிஎஸ் வரம்பு, நிதியாண்டுக்கு ரூ.2,40,000 என்பதற்கு பதிலாக மாதம் ரூ.50,000 அல்லது மாதத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில் டிடிஎஸ் வசூலிக்கப்படும்.
194D பிரிவின் கீழ், இன்ஸ்யூரன்ஸ் கமிஷன் மீதான டிடிஎஸ் வரம்பு ரூ.15,000லிருந்து ரூ.20,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 194G பிரிவின் கீழ், லாட்டரி விற்பனையில் டிடிஎஸ் வரம்பு ரூ.15,000லிருந்து ரூ.20,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications