இந்தியர்களுக்கும் தங்கத்திற்கும் இடையிலான உறவு என்பது பிரிக்க முடியாதது. பாரம்பரியமாக தங்கத்தை ஆபரணமாகவும் நாணயமாகவும் வாங்கி வைத்துக் கொண்டு வந்த இந்தியர்கள் சமீப காலமாக டிஜிட்டல் வடிவில் அவற்றை வாங்க தொடங்கி இருக்கின்றனர். தங்கம் நிலையான முதலீடு என்ற எண்ணம் இன்றைய இளம் தலைமுறைகள் வரை நீடிக்கிறது. ஆனால் அந்த தங்கத்தை வாங்கக்கூடிய வடிவம் தான் மாறி இருக்கிறது.
தங்கத்தை நகையாக வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் முதலீடு நோக்கத்தில் தான் தங்கம் வாங்குகிறேன் என்பவர்களுக்கு டிஜிட்டல் கோல்டு, கோல்டு ஈடிஎஃப் ஆகியவற்றை மாற்றுகளாக உள்ளன. தற்போது தங்க முதலீட்டை இன்னும் ஊக்குவிக்கும் வகையில் பங்குச்சந்தையில் எப்படி நாம் பங்குகளை வாங்குகிறோமோ அதேபோல தங்கத்தையும் வாங்கி வர்த்தகம் செய்வதற்கான ஒரு வாய்ப்பினை தேசிய பங்குச்சந்தை அறிமுகம் செய்திருக்கிறது.

பொதுவாக தங்கத்தை நாம் நகையாகவோ நாணயமாகவோ வாங்கும்போது தங்கத்தின் விலையோடு சேர்த்து செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை செலுத்த வேண்டும். அது மட்டும் இல்லாமல் அந்த நகையை பாதுகாப்பாக வைக்க வேண்டியதும் ஒரு சிக்கலாக இருக்கும். நகையை லாக்கரில் வைக்க வேண்டும் திருட்டு பயத்திலிருந்து அதனை பாதுகாக்க வேண்டும் என பல சிக்கல்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் தான் தேசிய பங்கு சந்தையில் எலக்ட்ரானிக் கோல்ட் ரெசிபிட் (electronic gold receipt - EGR) எனும் புதிய வர்த்தக பிரிவினை தொடங்கியுள்ளது. தங்கம் வர்த்தகத்தை எளிமையாகவும் வெளிப்படை தன்மையை அதிகரிக்கவும் எலக்ட்ரானிக் கோல்ட் ரெசிப்ட் எனும் புதிய பிரிவை தேசிய பங்குச் சந்தை கொண்டு வந்திருக்கிறது. இதனை டீமேட் வடிவிலான தங்கம் என அழைக்கிறார்கள்.
அதாவது நீங்கள் வாங்கும் தங்கம் மின்னணு முறையில் உங்களுடைய டீமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு ஈஜிஆர் ரசீதுக்கும் அதற்கு சமமான எடையுள்ள உண்மையான தங்கம் செபியின் அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பான பெட்டகங்களில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தங்கத்தை நான் ஒரு முதலீடாக தான் பார்க்கிறேன் தங்கம் விலை உயரும் போது நான் செய்யும் முதலீட்டின் மதிப்பு உயர்ந்த எனக்கு லாபம் தர வேண்டும் என எண்ணுபவர்களுக்கு தேசிய பங்குச்சந்தியின் எலக்ட்ரானிக் கோல்ட் ரெசிபிட் திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம்.
குறைந்த தொகைக்கும் கூட இதில் நாம் தங்கத்தில் முதலீடு செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு. ஈஜிஆர் வடிவில் தங்கத்தின் முதலீடு செய்தவர்கள் தேவைப்படும் சமயத்தில் அதனை விற்பனை செய்து தங்க கட்டிகளாகவோ அல்லது நாணயங்களாகவோ டெலிவரி எடுத்துக் கொள்ளலாம். ஈடிஎஃப் என்பது மியூச்சுவல் பண்டு திட்டங்களை போன்றது. ஒரு குறிப்பிட்ட ஃபண்டு நிர்ணயிக்கும் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் ஈஜிஆர் என்பது தங்கத்தின் மீதான நேரடியான உரிமையை உங்களுக்கு வழங்குகிறது.
தேவையற்ற கட்டணங்கள் எதுவும் இல்லாமல் தூய்மையான தங்கத்தை சேமிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும். பங்குச் சந்தையில் எப்படி நாம் ஒரு நிறுவன பங்கினை வாங்குகிறோமோ அதேபோல இந்த எலக்ட்ரானிக் கோல்ட் ரெசிப்டையும் வாங்க முடியும். 100 மில்லி கிராம் தொடங்கி 1 கிராம், 10 கிராம் , 100 கிராம் , 1 கிலோ என்ற கணக்கீட்டில் இந்த தங்கத்தை நாம் வாங்க முடியும்.
அதாவது குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரை பணத்தை கொடுத்து நம்மால் தங்கத்தை வாங்க முடியும். செய்கூலி, சேதாரம் குறித்த கவலை வேண்டாம். 24 கேரட் சுத்த தங்கம் உங்கள் பெயரில் வரவு வைக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இருந்து வெள்ளி அதாவது தங்க சந்தை செயல்படும் நேரத்தில் ஈஜிஆர் தங்கம் வாங்கலாம். இதில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு அவசியம். குறைந்த பட்சம் 1000 ரூபாய் முதலே கூட முதலீடு செய்யலாம், தேவைப்படும் போது பங்குச்சந்தையில் விற்று பணமாக்கலாம் அல்லது தங்க கட்டியாக டெலிவரி பெறலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

