இந்திய ரிசர்வ் வங்கி விரைவில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் புதிய ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகளை வெளியிட உள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விரைவில் மகாத்மா காந்தி (புதிய) சீரிஸில் ரூ.10 மற்றும் ரூ.500 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த ரூபாய் நோட்டுக்களில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரவின் கையொப்பம் இருக்கும்.
இந்த ரூபாய் நோட்டுக்களின் வடிவமைப்பு அனைத்து வகையிலும் மகாத்மா காந்தி (புதிய) சீரிஸில் உள்ள ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுக்களை போலவே அனைத்து வகையிலும் உள்ளது. கடந்த காலத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுக்களும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று அதில் தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி முதல் முறையாக கடந்த மாதம் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக, கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் மகாத்மா காந்தி (புதிய) சீரிஸில் ரூ.10 மற்றும் ரூ.500 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் கவர்னராக இதற்கு முன் இருந்த சக்திகாந்த தாஸின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் கடந்த டிசம்பரில் நிறைவடைந்தது. இதனையடுத்து அந்த மாதத்தில் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றார். ராஜஸ்தானை சேர்ந்த 1990ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் மல்ஹோத்ரா. இவர் ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பேற்பதற்கு முன்பு நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருமான துறையில் செயலாளராக பணியாற்றி வந்தார். நிதி,வரி,மின்சாரம்,தகவல் தொழில்நுட்பம்,சுரங்கம் ஆகிய துறைகளில் இவருக்கு 33 ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர்.
தற்போது ரிசர்வ் வங்கியின் 26வது கவர்னராக பணியாற்றி வருகிறார். கடந்த 2024-25ம் நிதியாண்டுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் கடைசி நிதிக் கொள்கை குழு கூட்டம் கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்ற பிறகு அவரது தலைமையில் நடைபெற்ற முதல் கூட்டமாகும். அந்த கூட்டத்தில், சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தது. வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 6.25 சதவீதமாக மாற்றி அமைத்தது.


Click it and Unblock the Notifications