Rich dad poor dad புத்தகத்தின் எழுத்தாளரும் பொருளாதார நிபுணருமான ராபர்ட் கியோசாகி சர்வதேச பொருளாதாரம் குறித்து வெளியிட கூடிய கணிப்புகள் அனைத்துமே உண்மையாகி வருகின்றன. 2025இல் வெள்ளி விலை பல மடங்கு உயரும் என முன் கூட்டியே கணித்தார், அது நடந்தது.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாக முதலீடு சம்பந்தப்பட்ட அறிவுரைகளை தன்னுடைய ஃபாலோவர்களுக்கு வழங்கிய வண்ணம் இருக்கிறார். மக்கள் பங்குச்சந்தைகளை விடுத்து உண்மையான சொத்துகளான தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என இவர் தொடர்ச்சியாக கூறி வருகிறார். அதற்கேற்ற வகையில் இந்த ஆண்டில் தங்கம், வெள்ளி விலை 50%க்கும் மேல் உயர்ந்தன, பங்குச்சந்தைகள் சரிவை கண்டன.

உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடையப் போகிறது என தொடர்ந்து அறிவுரை வழங்கி வரும் ராபர்ட் கியோசாகி, தற்போது ஒரு புதிய அறிவுரையை வெளியிட்டு இருக்கிறார். அதில் 100 டாலர்களைக் கொண்டு என்ன வாங்க முடியும் தெரியுமா என்ற கேள்வியுடன் தன்னுடைய பதிவினை அவர் தொடங்கி இருக்கிறார். 1900 ஆம் ஆண்டு 100 டாலர் இருந்தால் எட்டு மாதங்களுக்கான மளிகை பொருட்கள் கிடைத்திருக்கும், 1960 இல் 100 டாலரின் மதிப்பு வெறும் 37 டாலரின் மதிப்புக்கு நிகராக குறைந்தது.
2000 ஆம் ஆண்டு அந்த 100 டாலரின் மதிப்பு 6 டாலருக்கும் கீழ் குறைந்தது 2025-ல் அந்த 100 டாலரின் மதிப்பு வெறும் 3 டாலராக குறைந்துவிட்டது. எனவே உங்களுடைய அம்மா அப்பா சொல்லிக் கொடுத்தது போல பணத்தை சேமித்து வைத்தால் அதன் மதிப்பு தான் குறையுமே தவிர அதனால் உங்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது. நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்றால் பழைய ஐடியாக்களை கைவிடுங்கள் என கூறியிருக்கிறார்.
ஒரு வெற்றியாளரை போல சிந்தியுங்கள் பழைய ஐடியாக்கள் உங்களுக்கு இனி உதவாது எனக் கூறியிருக்கும் அவர், என்னுடைய ரிச் டேட் புவர் டேட் புத்தகத்திலேயே நான் கூறி இருக்கிறேன் பணத்தை சேமிப்பவர்கள் தோற்றுப் போவார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார். நான் 1965 ஆம் ஆண்டு முதலே வெள்ளி வாங்குகிறேன், 1972 ஆம் ஆண்டில் இருந்தே தங்கத்தை வாங்குகிறேன் , 2019 ஆம் ஆண்டிலிருந்து பிட்காயினை வாங்குகிறேன். அண்மையில் நான் 2000 ஆம் ஆண்டு 4,50,000 டாலருக்கு வாங்கிய தங்கத்தை வைத்து அண்மையில் 4.5 மில்லியன் டாலருக்கு சொந்தமாக வீடு வாங்கினேன் எனக் கூறியுள்ளார்.
பணத்தை, பணமாக சேமித்து வைக்காமல் முதலீடு செய்ய வேண்டும் அந்த முதலீடு தங்கம் ,வெள்ளி போன்றவையாக இருக்க வேண்டும் என்பதுதான் இவர் கூறக்கூடிய விஷயம். எப்படி இருந்தாலும் தங்கம் வெள்ளியின் விலை நீண்ட கால அடிப்படையில் உயர தான் போகிறது என்பதால் அனைத்தையும் விட்டுவிட்டு இதில் கவனம் செலுத்துங்கள் என ராபர்ட் கியோசாகி அறிவுறுத்துகிறார்.


Click it and Unblock the Notifications