இந்தியாவில் ஜனவரி மாதம் வெள்ளி விலை சில்லறை விற்பனையில் ஒரு கிராம் 425 ரூபாயும் ஒரு கிலோ 4.25 லட்சம் ரூபாயும் என வரலாற்று உச்சம் தொட்டது. ஆனால் அதன் பின்னர் வெள்ளி விலை சர்ரென குறைந்து வந்தது. இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 225 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.25 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது.
தற்போது வெள்ளி விலை தனது வரலாற்று உச்சத்தில் இருந்து ஒரு கிராமுக்கு 200 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 2 லட்சம் ரூபாயும் விலை குறைந்துள்ளது. அதாவது வரலாற்று உச்சத்தில் இருந்து வெள்ளி விலை 47% சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் வெள்ளி விலை இன்னமும் சரியுமா என்ற கேள்வி எழுகிறது.
என்ரிச் மணி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆர். பொன்முடி அளித்துள்ள பேட்டியில், வெள்ளியின் விலை Underperform என்ற நிலையிலேயே இருக்கும் என கூறுகிறார். தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விகிதம் (Gold-Silver Ratio) மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், வெள்ளி விலை சரிவிலேயே நீடிக்க அதிக வாய்ப்புள்ளது என்கிறார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே தங்களது வரலாற்று உச்சத்தை எட்டின. அதன் பிறகு ஏற்பட்ட விலைத் திருத்தத்தில் தங்கம் தனது உச்ச விலையிலிருந்து சுமார் 26% வரை மட்டுமே சரிந்தது. ஆனால், வெள்ளி மிக கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன் சாதனை உச்ச விலையிலிருந்து 47% சரிவை சந்தித்துள்ளது என்கிறார்.
ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்குவதற்கு எத்தனை அவுன்ஸ் வெள்ளி தேவைப்படுகிறது என்பதை அளவிடுவதே 'தங்கம்-வெள்ளி விகிதம்'. முதலீட்டாளர்கள் இந்த இரண்டு உலோகங்களின் ஒப்பீட்டு செயல்திறனை மதிப்பிட இதை பயன்படுத்துகின்றனர்.
இந்த விகிதம் உயர்ந்தால், தங்கம் வெள்ளியை விட மிக சிறப்பாக செயல்படுகிறது என அர்த்தம். மாறாக, இந்த விகிதம் குறைந்தால் வெள்ளி தங்கத்திற்கு நிகராக முன்னேறி வருகிறது என அர்த்தம். தற்போதைய சந்தை நிலவரப்படி இந்த விகிதம் அதன் நீண்டகால சராசரி மதிப்பை தாண்டி உயர்ந்துள்ளது. இந்த விகிதம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், வெள்ளி தொடர்ந்து தங்கத்தை விட பின்தங்கிய நிலையிலேயே இருக்கும். அதாவது தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளி விலை பெரிதாக உயராது.
வெள்ளி ஆபரணமாக மட்டுமல்ல சோலார் பேனல்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பல முக்கிய தொழில்துறைகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்துறை பொருளாகவும் உள்ளது. இதனால் தான் அதிக ஏற்ற இறக்கம் கொண்டதாக வெள்ளி இருக்கிறது. வெள்ளி விலை ஏறும் போது வேகமாக உயர்ந்தாலும், சந்தையில் சரிவு ஏற்படும் போது மிக வேகமாக சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது.
உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகள் இருப்பதால் தங்கத்தை நோக்கியே முதலீட்டாளர்கள் செல்கின்றனர். இதனால் வெள்ளிக்கான டிமாண்ட் குறைந்துவிட்டது. இன்னும் சில காலம் வெள்ளி விலை ஒரு அளவுக்குள்ளேயே ஏறி இறங்கி பின்னர் உயரலாம் என சொல்லப்படுகிறது. உடனே லாபம் எதிர்பார்ப்பவர்கள் வெள்ளி முதலீட்டை தற்போதைக்கு தவிர்க்கலாம் என்பதே நிபுணர்களின் அறிவுரை.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

