தங்க பத்திரம் திட்டம் முதலீடு செய்தவர்களுக்கு லாபமாக இருந்தாலும் மத்திய அரசினை பொருத்தவரை இது தற்போது பெரும் தலைவலியாக உருவெடுத்து இருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவருகிறது. மத்திய அரசு தங்க பத்திரங்களுக்காக கூடுதல் தொகையை செலவிட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி ஆண்டுக்கு நான்கு முறை ரிசர்வ வங்கி சார்பில் வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் வாயிலாக தங்க பத்திரங்கள் வெளியீடு செய்யப்பட்டன. ஒரு கிராம் தங்கத்தின் அளவு இவ்வளவு என விலை நிர்ணயம் செய்யப்பட்டு பத்திரங்கள் விற்கப்பட்டன.

இதில் முதலீடு செய்பவர்களுக்கு எட்டு ஆண்டுகள் கழித்து அன்றைய தினத்தில் தங்கத்தின் விலை என்னவோ அந்த முதிர்வு தொகையும் கூடுதலாக அவர்கள் முதலீடு செய்த தொகைக்கு ஆண்டுக்கு 2.5% வட்டி தொகையும் சேர்த்து வழங்கப்படும்.
அரசு இதுவரை 67 முறை தங்க பத்திரங்களை வெளியீடு செய்துள்ளது. ஆனால் நடப்பு ஆண்டில் இதுவரை தங்க பத்திர வெளியீடு குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. அரசு தங்க பத்திர திட்டத்தை கைவிடுவதற்கான முடிவில் இருப்பதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் தங்க பத்திர திட்டம் தற்போது அரசுக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது எனக் கூறுகின்றனர் சந்தை சார்ந்த நிபுணர்கள்.
ஆரம்ப கட்டத்தில் அரசு இந்த திட்டத்தை அறிமுகம் செய்த போது ஏராளமானவர்கள் இதில் முதலீடு செய்ய முன்வந்தனர். கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் தங்க பத்திர திட்டங்கள் மூலமாக அரசு 72,274 கோடி திரட்டி உள்ளது. முதலீட்டாளர்களை பொருத்தவரை தங்க பத்திர திட்டம் என்பது லாபகரமானது.
ஏனெனில் 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் மட்டும் தங்கத்தின் விலை சராசரியாக 33% அதிகரித்து இருந்தது. இதன் காரணமாக தங்க பத்திரங்களுக்கான டிமாண்ட் அதிகரித்தது. எனவே அரசும் அதிக பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டியது. ஆனால் அந்த பத்திரங்கள் எல்லாம் முதிர்வடையும் போது தான் அரசு சிக்கலை உணர தொடங்கியது.
உதாரணமாக முதல் முறையாக தங்க பத்திரம் வெளியிட்டபோது ஒரு கிராம் தங்கம் 2,684 ரூபாய், அப்போது 9.13 லட்சம் பத்திரங்களை விற்பனை செய்து 245 கோடி ரூபாயை திரட்டியது. இந்த பத்திரங்கள் அனைத்தும் எட்டு ஆண்டுகள் கழித்து முதிர்வு பெறும் போது இதற்கு வட்டியாக 49.04 கோடி ரூபாயை அரசு செலுத்த வேண்டி இருந்தது. பத்திரம் முதிர்வு பெறும் போது தங்கம் விலை ஒரு கிராம் 6132 ரூபாய். எனவே கூடுதலாக 560 கோடி ரூபாயை அரசு வழங்க வேண்டி இருந்தது.
முதலீட்டாளர்களை பொறுத்தவரை இது 128% லாபம் ஆனால் அரசு இதற்கு 148% தொகை கூடுதலாக செலுத்தியுள்ளது. மொத்தம் வெளியிடப்பட்ட 67 தங்க பத்திர தொகுப்புகளில் 63 தொகுப்புகள் இனி வரும் காலங்களில் முதிர்வு பெற உள்ளன. இதற்கு கூடுதலாக அரசு செலவிட வேண்டி இருப்பதால் அரசு தங்க பத்திர வெளியீடு குறித்த தகவலை வெளியிடாமல் இருக்கிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications