நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், மக்கள் சேமிப்பின் அவசியத்தினை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.
அதிலும் சம்பளம் பெறுகின்ற ஒவ்வொருவரும், மாதத்தின் தொடக்கத்திலுல் நாயகன் போல உணரும் நிலையில், சில நாட்கள் சென்றவுடன் செலவுக்கு பணமில்லாமல் தடுமாறுவோம். அடுத்த மாத சம்பளத்திற்காக நாட்களை எண்ணி காத்துக் கொண்டுள்ளது பெரும் கவலையளிக்கும் விஷயமே.
இவ்வாறு அல்லல்படும்போது நமக்கு உதவுவது தான் சேமிப்பு. அதிலும் இன்றைய காலகட்டத்தில் கொரோனா போன்ற நெருக்கடியான நிலைகளை எப்படி சமாளிப்பது. எந்த மாதிரியான சேமிப்புகளை தேர்தெடுக்கலாம் வாருங்கள் பார்க்கலாம்.

தங்கத்தில் முதலீடு
இன்று நிலவி வரும் நெருக்கடியான நிலையிலும் கூட மிகச்சிறந்த முதலீடாகவும், பாதுகாப்பு புகலிடமாகவும் இருக்கிறது. அதோடு தங்கத்தினை ஒரு கிராமிலிருந்து கூட வாங்கி வைக்கலாம். பிசிகலாக தங்கத்தினை வாங்கி வைக்கும் போது நீங்கள், செய்கூலி, சேதாரம் என செலுத்த வேண்டியிருக்கும்.
ஆக பேப்பர் தங்கம் என்று அழைக்கப்படும் தங்க பத்திரம், தங்கம் சார்ந்த பண்டுகள், கமாட்டிட்டி சந்தை உள்ளிட்ட பல முதலீடுகளில் முதலீடு செய்யலாம். இது லாபகரமானதாகவும், விற்கும் போது அன்றாட விலைக்கு ஏற்ப விற்க முடியும்.

பிக்ஸட் டெபாசிட்டிலும் முதலீடு செய்யலாம்
இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பான முதலீடு என்றாலே அடுத்த நிமிடம் நாம் நினைப்பது வங்கி பிக்ஸட் டெபாசிட் தான். இந்த பிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அதிகம். அதிக ரிஸ்க் வேண்டாம். ஏதோ கணிசமான வருவாய் வந்தால் போதும் என நினைப்பவர்கள் பலர் உண்டு.அவர்களுக்கு ஏற்ற திட்டம் பிக்ஸட் டெபாசிட் தான். குறிப்பாக மூத்த குடி மக்களுக்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான திட்டம். இதிலும் வங்கிக்கு வங்கி வட்டி விகிதங்கள் வேறுபடுகின்றன. ஆக உங்களுக்கு ஏதுவான ஒன்றை தேர்தெடுத்து டெபாசிட் செய்யலாம்.

அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம்
ஓய்வு காலத்தினை எந்தவிதமான நிதி பிரச்சனையும் இல்லாமல் சூமுகமாக கழிக்க, அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம் தான் சிறந்த திட்டமாக இருக்க முடியும். வயதானவர்கள் பொருளாதார பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதோடு மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழை மக்கள் என அனைவருமே, அரசின் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். இதில் நீங்கள் 1000, 2000, 5000, என்ற முறையில் முதலீடு செய்து கொள்ளலாம். இதன் மூலம் உங்களது வயதான காலத்தில் எந்த வித நிதி பிரச்சனையும் இல்லாமல் வாழ முடியும்.

லைஃப் இன்சூரன்ஸ் – டெர்ம் இன்சூரன்ஸ்
டெர்ம் இன்சூரன்ஸ்களை பொறுத்த வரை மிகச் சிறந்த முதலீடுகளாகவே பலர் காப்பீடு செய்கின்றனர். ஏனெனில் குறைந்த காப்பீட்டில் பெரிய அளவில் க்ளைம் செய்து கொள்ள முடியும். அதிலும் மாதம் 500 - 600 ரூபாய் வரை செலுத்தினாலே 1 கோடி ரூபாய் க்ளைம் செய்து கொள்ள முடியும். இது ஒரு வேளை பாலிசிதாரர் துரதிஷ்டவசமாக இறந்துவிட்டாலும், அவர்களின் குடும்பத்தினருக்காவது இது உதவும் என்ற நோக்கில் தான் பார்க்கப்படுகிறது.

பொது வருங்கால வைப்பு நிதி
நீண்டகால நோக்கங்களுக்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு நிச்சயம் இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத சிறந்ததொரு முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது. இது குழந்தைகள் முதல் பெரியோர் வரை முதலீடு செய்து கொள்ளலாம். குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர் துணை நின்று முதலீடு செய்து கொள்ளலாம்.

ஹெல்த் இன்சூரன்ஸ் கட்டாயம்
ஹெல்த் இன்சூரன்ஸினை பொறுத்தவரையில், நான் தான் நன்றாக இருக்கிறேனே? எனக்கு எதற்கு இன்சூரன்ஸ் வேண்டவே வேண்டாம். என்பவர்கள் தான் இங்கு அதிகம்.
கொரோனா பரவி வரும் இந்த நெருக்கடியான நிலையில், உங்களது மருத்துவ செலவு, ஏதேனும் தீவிர நோய் ஏற்படுகின்றது எனில், இருக்கும் சேமிப்புகளை செலவு செய்து விட்டோ அல்லது கடன் வாங்கி செலவு செய்து விட்டு, பிறகு அல்லாடுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டங்களில் பல நிறுவனங்கள் குறைந்த பிரீமியத்தில், நிறைய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்குகின்றன. இது தனி நபர் பாலிசி, குடும்ப பாலிசி, குழந்தைகளுக்கான பாலிசி என தனித்தனியாக உள்ளது. ஆக உங்களின் தேவைக்கு ஏற்ப இவற்றை தேர்தெடுத்துக் கொள்ளலாம்.
அன்றாடம் நம் வாழ்வில் அனாவசிய செலவுகளை தவிர்த்து, இது போன்ற அத்தியாவசிய செலவுகளை செய்வது தவறில்லையே. இதுவும் ஒரு வகையாக முதலீடு என்று கூட சொல்லலாம். ஏனெனில் உங்களது ஹெல்திற்காக நீங்கள் செய்யும் முதலீடு என வைத்துக் கொள்ளலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்
பொதுவாக மியூச்சுவல் ஃபண்டுகள் என்றாலே சற்று பாதுகாப்பான மற்றும் சிக்கலான முதலீடு என்பார்கள். இது சந்தையுடன் நேரடியாக தொடர்பில் உள்ளது என்பதால், ஏற்ற இறக்கத்திற்கு ஏற்பவும் இருக்கும். ஆனால் இதிலும் ரிஸ்க் குறைந்த பல பண்டுகள் உள்ள. குறிப்பாக கடன் சார்ந்த திட்டங்கள், ஹைபிரிட் திட்டங்கள், பேலன்ஸ்ட் பண்டுகள், கில்ட் பண்டுகள், இன்கம் பண்டுகள், செக்டோரல் பண்ட், டெப்ட் பண்டுகள் என பலவற்றிலும் முதலீடு செய்யலாம். இதில் பலவற்றிக்கு வரி சலுகை உண்டு. கணிசமான அளவில் வருமானமும் உண்டு.

பங்கு சந்தை முதலீடு
பங்கு சந்தை முதலீடுகளை பொறுத்த வரை, நேரடியாக ஒரு பங்கினை தேர்வு செய்து பங்கு சந்தையில் முதலீடு செய்வதாகும். இதில் சற்று ரிஸ்க் அதிகம் என்பதால் இதனை அதிகம் யாரும் முதலீடு செய்ய நினைப்பதில்லை. ஆனால் முறையாக கற்றுக் கொண்டு, சரியான ஆலோசனைப் படி, சரியான தேர்வினை தேர்வு செய்யும் போது முதலீடு செய்யலாம். இது நீண்டகால முதலீட்டிற்கு ஏற்றது.

பொது பங்கு வெளியீடு
பொது பங்கு வெளியீடு என்பது நிச்சயம் சிறு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் பங்குச்சந்தையில் நுழையும் நிறுவனங்கள் வெளியிடும் பங்குகளே, ஐ.பி.ஓ என குறிப்பிடப்படுகின்றது. அதாவது முதல் பங்கு வெளியீடு அல்லது பொது பங்கு வெளியீடு. பட்டியலிடப்படும் நல்ல நிறுவனங்களில் முதலீடு செய்ய இந்த வெளியீடுகள் சிறந்த வாய்ப்பாக கருதப்படுகின்றன. அதாவது ஒரு கம்பெனி தன்னுடைய தொழிலை விரிவுபடுத்துவதற்காக பங்குச் சந்தைக்கு வந்து பங்குகளை வெளியிடுவார்கள். ஆரம்பத்திலேயே முதலீடு என்பதால் லாபம் அதிகம்.

ரியல் எஸ்டேட் முதலீடு
இந்த நெருக்கடியான காலகட்டங்களில் ரியல் எஸ்டேட் என்பது மிகவும் முடங்கிபோன ஒன்றாக உள்ளது. தேவை குறைவாக இருந்தாலும் விலை குறைந்தபாடில்லை. அதோடு உங்களது கையில் அதிகளவு உபரி தொகை இருக்கும் போது இதில் முதலீடு செய்யலாம். மாதம் இஎம்ஐ செலுத்திக் கொள்ளலாம் என ஒரு பிளாட் வாங்குவது, இடம் வாங்குவது என்பது இந்த காலகட்டத்தில் யோசித்து செய்வது நல்லது. ஆனால் நீண்டகால நோக்கில், கையில் இருக்கும் பணத்தினை என்ன செய்வது என்ற தெரியாதவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.